அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு…!
மிசோரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக, அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் மக்கள் தொகை 1,091,014 ஆகும். சுமார் 21,087 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மாநிலம் உள்ளது. இந்நிலையில், ஒரு சதுர கிமீ பரப்புக்கு 52 நபர்கள் வசித்து வருகின்றனர். மிசோரம் மாநிலம் இந்த சராசரியில் அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக குறைந்த மக்கள் பரப்பை கொண்டுள்ளது.
இதனை அடுத்து, மிசோரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக அங்குள்ள அமைச்சர்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிசோரம் மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, எனத் ஜஸ்வால் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்று, தற்போது உயிருடன் உள்ள ஆண் அல்லது பெண் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அந்த நபருக்கு சான்றிதழும், கோப்பையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செலவை எனது மகன் நடத்தும் கட்டுமான ஆலோசனை நிறுவனம் ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மிசோரம் மாநிலத்தின் அண்டை மாநிலமான அசாம் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 2 குழந்தைகள் மட்டும் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.