விவசாயிகளின் கண்ணீர் கதை

 

முற்றும் என்றாகுமா?

காய்கறிகள் மீண்டும் சந்தைகளில் குவியத் தொடங்கியுள்ளன. கேமரன்மலையில் இருந்து காய்கறி விநியோகம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தங்களின் உற்பத்தியை அறுவடை செய்து விற்பதற்கு விவசாயிகளுக்கு திங்கள் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடங்கி நகர்ப்புறங்களில் வாழும் பயனீட்டாளர்கள் போதுமான அளவில் காய்கறிகளைப் பெறும் வண்ணம் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விலையும் கணிசமாகவும் நியாயமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயப் பணிகள் மீண்டும் தொடரவும் அறுவடை செய்து சந்தைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கின்றன. மறுபரிசீலனை செய்யப்பட்ட எஸ்ஓபி விதிமுறைகளின் கீழ் இவையாவும்  சத்தியமாகி இருக்கின்றன.

காய்கறிகள் விநியோகம் தடைபட்டு அதனால் ஏற்பட்ட பற்றாக்குறையினால் காய்கறிகளின் விலைகள் 10 மடங்கு வரை எகிறிப் போயிருந்ததையும் கண்டோம் – பதறினோம்.

இதற்குப் பிறகு விவசாயம், அறுவடை, விநியோகம் என்று இனி எதிலும் இடையூறு இருக்காது என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக கேமரன்மலை மலாய் விவசாயிகள் சங்கத் தலைவர் டத்தோ சடை் அப்துல் ரஹ்மான்  சைட் அப்துல் ரஷிட் நம்பிக்கை தெரிவித்தார்.

அதே சமயம் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் அதிகாரப்பூர்வ அனுமதிக்குக் காத்திருப்பதாக கேமரன்மலை விவசாய தொழில்முனைவர் சங்கத்தின் தலைவர் டான் வெய் வூன் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் பச்சகை் கொடிக்குக் காத்திருக்கும் அதேவேளையில் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கி விட்டதாக விவசாயம், உணவு தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி கடந்த புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

புதிய எஸ்ஓபி நடைமுறைகளின் கீழ் இதுநாள் வரை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் விளைச்சலை அறுவடை செய்து ஏற்றி இறக்கலாம்.

எழுத்துப்பூர்வமாக அனுமதி கிடைத்ததும் அனைத்து ஐயங்களும் சந்தேகங்களும் ஓரத்தில் வைக்கப்பட்டு தொழில் சுறுசுறுப்பாக இயங்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.

ஜூன் 1ஆம் தேதி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (இஎம்சிஓ) அமல்படுத்தப்பட்டதில் கேமரன்மலையில் விவசாயத் தொழில்துறை முற்றாக முடங்கியது.

இக்காலகட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட 560 டன் காய்கறிகளில் 40 விழுக்காட்டைக் கைவிட வேண்டிய இக்கட்டான சுழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இதுவே நகர்ப்புறங்களில் காய்கறிகளுக்குப் படுமோசமான பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசிகள் எகிறியதற்கு மூலகாரணமாக அமைந்து விட்டது.

விவசாயம் – உணவு தொழில்துறை அமைச்சு, போலீஸ், தேசியப் பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் நடத்திய பேச்சுக்குப் பின்னர் புதிய தளர்வுகளுக்கு வழி பிறந்து விவசாயிகளின் கண்ணீரும் துடைக்கப்பட்டது.

விவசாயிகளின் வேதனைகளையும் இழப்புகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு அரசு தரப்பில் இப்புதிய தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் மட்டுமன்றி பயனீட்டாளர்களும் விலைவாசி உயர்வாலும் பற்றாக்குறையாலும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டனர்.

இஎம்சிஓ விதிப்பால் சீமார் 500 விவசாயிகள், 80 பூந்தோட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டனர். விளைச்சல் அனைத்தும் குப்பைக்குத்தான் போயின.

பூந்தோட்டக்காரர்கள் இஎம்சிஓ விதிக்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 50 கோடி வெள்ளி இழப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here