நாகேந்திரன் வேலாயுதம்,மக்கள் ஓசை செய்தியாளர், சிரம்பான், (ஜூன் 24):
எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வங்கிக் கடன்கள் செலுத்த வேண்டும் , மருத்துவச் செலவு என மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான செலவு உள்ளது. எங்களையும் வாழ விடுங்கள் என இங்கு சிரம்பான், நீலாய் வட்டார சிகை அலங்கரிப்பாளர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட்-19 தொற்றின் பரவுதலைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட எம்சிஓ 1.0 காலகட்டத்தில் சிகை அலங்காரக் கடைகள் மூடப்பட்ட நாள் தொடங்கி, சிறுகச் சிறுக வருமானத்தை முற்றாக இழந்து தவிக்கும் நிலைக்கு எங்களின் தொழில் முடக்கம் கண்டது என சிகை அலங்கரிப்பாளர் கோபாலகிருஷ்ணன் கணபதி கூறினார்.
அக்குறிப்பிட்ட நடமாட்டக் கட்டுட்பாட்டு ஆணை காலகட்டத்தில் கடைகளுக்கு 50 சதவீதம் வாடகை குறைக்கப்பட்டது, அரசாங்கம் சில உதவித் தொகையும் வழங்கியிருந்தது. இருந்தபோதிலும் அக்காலகட்டத்தில் கடைப் பணியாளர்கள் சம்பளப் பிரச்சினை, கடைகளுக்கான இதர செலவுகள் என சமாளிக்க முடியாத நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த எங்களுக்குதான் அதன் வலி தெரியும் என்றனர்.
இவர்களுடன் குணசீலன் பூபாலசிங்கம், சுப்பிரமணியம் நாராயணன், குமரன் மாணிக்கம், ரமேஷ் மோகன் ஆகிய சிகை அலங்கரிப்பாளர்களும் மேலும் கூறியதாவது, ஒவ்வொரு எம்சிஓ காலகட்டத்திலும் நாங்களும் எங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களும் தேசிய பாதுகாப்பு மன்றம் விதித்துள்ள எம்சிஓ-வை முறையாகக் கடைப்பிடித்து வந்துள்ளோம்.
அதேவேளை சிகை அலங்காரக்கடை பணியாளர்களுக்கும் சிகை அலங்காரம் செய்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கும் சரி,
ஒருவருக்குகூட கோவிட்-19 தொற்று பரவியதாக தகவல் இல்லாத சூழ்நிலையில், ஏன் இக்காலகட்டத்தில் சிகை அலங்காரக் கடைகளை நாங்கள் திறக்க அனுமதிக்கக்கூடாது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப்படி எம்.சி.ஓ -வை கடைப்பிடிப்பதில் எங்களுக்கு எந்தவொரு சிரமமுமில்லை, எனவே வாய்ப்புக்கொடுங்கள், எங்களையும் வாழவிடுங்கள் என அவர்கள் தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தினசரி காலை 8.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை நேர அவகாசம் கொடுங்கள், வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒருவர் எனும் வரிசைப்படி கடையின் உள்ளே சிகை அலங்காரம் மேற்கொள்வதற்குஏற்றவாறு எஸ்ஓபி-யை கடுமையாக் கினாலும் அதனைப் பின்பற்றுவதற்கு நாங்கள் தயார் என அவர்கள் தொடர்ந்து கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.