மலாய் ஆட்சியாளர்களின் உத்தரவை மதிக்காத அம்னோ தலைவர்கள்

நிராகரிக்கப்பட வேண்டும்- நஜிப்

தங்களின் பதவிகளைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மலாய் ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கும் எதிராகச் செயல்படக்கூடிய அல்லது மௌனமாக இருக்கும் அம்னோ உறுப்பினர்களை நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வலியுறுத்தினார்.

மலாயன் யூனியனை எதிர்க்கவும் மலாய் ஆட்சியாளர்களைத் தற்காக்கவும் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடவும் 1946ஆம் ஆண்டு அம்னோ தோற்றுவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அம்னோவின் அமைப்புச் சட்டத்தின் 3 ஆவது விதி கட்சியின் பிரதான நோக்கத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. மன்னராட்சி அமைப்பு விதிகளை ஆதரித்து தற்காப்பதுதான் அதுவாகும்.

ஜனநாயக நாடாளுமன்ற நடைமுறையையும் தற்காத்து ஆதரிக்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது எனவும் அவர் சொன்னார்.

மக்களின் நலனுக்காகவும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காகவும் அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்பது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு நெருக்கடியான நிலையில் இல்லாவிடில் மாட்சிமை தங்கிய மாமன்னர், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அரசாங்கத் துறைகளையும் மலாய் ஆட்சியாளர்களையும் சந்தித்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார்.

ஆகவே அம்னோவின் போராட்டத்தில் ஆர்வம் செலுத்தாதவர்கள் வரக்கூடிய அம்னோ தேர்தல்களில் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

அப்படியே அவர்கள் போட்டியிட்டாலும் சிரமப்படும் மக்களால் இவர்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவார்கள். கட்சித் தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டால் அம்னோ உறுப்பினர்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும் எனவும் நஜிப் வலியுறுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here