டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவும் சாத்தியம் அதிகம்!
ஜெனிவா:
மக்களின் அலட்சியப் போக்கால் உருமாற்றத்தொற்று விரைவில் பரவும் அபாயம் அதிகம் இருக்கிறது. இன்னும் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசி கிடைத்த பாடில்லை.
கொரோனா தொற்று எந்த நாட்டுக்கும் பயணத்தடையின்றி சென்றுவிடும். அதனால் எந்த நாடும் மார்த்தட்டிக் கொள்ள முடியாது
குறிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம், ‘டெல்டா’ வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு அழுத்தமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், இதுவரை பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்களில், டெல்டா வைரஸ் தான் வேகமாக பரவும் சக்தி உடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
இந்த வைரஸ் பற்றி சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது என்றும் தற்போது, 85 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் இந்த வைரஸ் வேகமாக பரவுவதாக தெரியவந்துள்ளது என்று கூறிய டெட்ரோஸ், இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதும் கவலையளிக்கிறது என்றார்.
விரைவில் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.