வட்டிக்குக்கடன் வாங்கும் அவலம்

வருமானம் இல்லாமல் தத்தளிக்கிறோம்!

கோலாலம்பூர், 

கடந்த ஒரு மாதமாக நாடு தழுவிய அளவில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எங்களின் வருமானம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி சுமார் 2 மாதங்கள் வரை முடிதிருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. அப்போதும் எங்கள் வருமானம் பாதிப்பை எதிர்நோக்கியது.

ஆனாலும் கையில் இருந்த சேமிப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையை நடத்தினோம். அந்தச் சேமிப்புத் தொகையைக் கொண்டுதான் கடை வாடகை, தொழிலாளர்களின் சம்பளம், குடும்பச் செலவு ஆகியவற்றை வழி நடத்தினோம்.

அதன் பின்னர் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து மெல்ல மெல்ல மீட்சி காணத் தொடங்கியது. தற்போது மீண்டும் முடிதிருத்தும் நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து செய்வதறியாது தவிக்கிறோம் என லோகநாதன் பலராமன், கலைச்செல்வன் தண்ணீர்மலை, சேமுவேல் தமிழ்ச்செல்வம், சதிஷ்குமார் நாதன், கதிரேசன் ராஜகோபால் ஆகியோர் குறிப்பிட்டனர்.

கடந்த முறை செலவு செய்ததைப்போல் இம்முறை எங்களிடம் சேமிப்பு கிடையாது. எங்களுக்கு இது மட்டுமே தொழில். இது தவிர மாற்றுத் தொழில் ஏதும் தெரியாது – கிடையாது. கடை வாடகை, தொழிலாளர்களின் சம்பளம் ஆகியவற்றை ஈடுகட்ட முடியாமல் பலரும் தங்கள் கடைகளை மூடி விட்டனர்.

முன்னதாக மூன்று, நான்கு முடிதிருத்தும் நிலையங்களை வைத்திருந்த உரிமையாளர்கள்கூட தற்போது ஒரு நிலையத்தை மட்டுமே நடத்தும் சுழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தவிர குடும்பச் செலவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. எங்களை நம்பி குடும்பத்தார் உள்ளனர்.

இந்தச் செலவுகளை ஈடுகட்எங்களுள் சிலர் வட்டிக்குக் கடன் பெறும்  சுழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என அவர்கள் கூறினர்.

இதற்கிடையே தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போதுதான் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என தற்காப்பு மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

தினசரி பதிவாகும் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்தால்தான் இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில் எப்போது இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்படும் என தெளிவாகச் சொல்ல முடியாது. அதுவரை எங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என்றும் தெரியவில்லை.

எனவே முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அது தொடர்பில் எஸ்ஓபி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டால் அதனை நாங்கள் முழுமையாகக் கடைப்பிடிப்போம். மேலும் கடைகளில் பாதுகாப்பு அம்சங்களையும் அதிகப்படுத்துவோம் எனவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

செய்தி: தி. மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here