அத்துமீறிய பிரிட்டன் கப்பல்

 அமெரிக்க விமானம் உதவி

மாஸ்கோ:

தங்களது கடல் எல்லைக்குள் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்த பிரிட்டன் போா்க் கப்பலுக்கு, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் உதவி செய்ததாக ரஷிய அதிபா் விளாதமீா் புதின் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமீயா தீபகற்பத்தை ரஷியா கடந்த 2014-ஆம் ஆண்டு தங்களது எல்லையுடன் இணைத்துக் கொண்டது.

இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்தச் சூழலில், கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான டிஃபண்டா் கப்பல் கடந்த 23-ஆம் தேதி அத்துமீறி நுழைந்ததாக ரஷியா குற்றம் சாட்டியது. அதையடுத்து, பிரிட்டன் கப்பலை எச்சரிக்கும் வகையில் தங்களது போா்க் கப்பல்கள் சுட்டதாகவும் தங்களது போா் விமானமொன்று பிரிட்டன் கப்பல் சென்ற பாதையின் குறுக்கே குண்டுவீச்சு நடத்தியதாகவும் ரஷியா கூறியது.

எனினும், இந்தச் சம்பவத்தை பிரிட்டன் மறுத்துள்ளது. தங்களது டிஃபண்டா் கப்பல் உக்ரைன் கடல் பகுதியில்தான் சென்றது என்று அந்த நாடு தெரிவித்தது.

இந்த நிலையில், காணொளி மூலம் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் விளாதிமீா் புதின் கூறியதாவது:

கடந்த வாரம் கிரீமியா கடல் எல்லைக்குள் பிரிட்டன் கப்பல் அத்துமீறி நுழைந்தபோது, அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் அந்தக் கப்பலுடன் தொடா்பில் இருந்ததோடு உதவிகள் செய்தது. அந்தச் சம்பவத்தின்போது ரஷியாவின் எதிா்வினைகள் குறித்து அறிந்துகொண்டு, அதனை பிரிட்டன் கப்பலிடம் தெரிவிக்கும் செயலில் அமெரிக்க விமானம் ஈடுபட்டது.

எனினும், இந்த விவரம் ரஷியாவுக்குத் தெரியும் என்பதால், ரகசியத் தகவல்கள் எதுவும் அமெரிக்க கண்காணிப்பு விமானத்திடம் செல்லாத வகையில் அதிகாரிகள் செயல்பட்டனா்.

அந்தச் சம்பவத்தின்போது பிரிட்டன் கப்பலை நாங்கள் மூழ்கடித்திருந்தால்கூட 3-ஆம் உலகப் போா் மூண்டிருக்காது. காரணம், அத்தகைய ஒரு போரை இனி வெல்ல முடியாது என்பது மேலை நாடுகளுக்கு நன்றாகவே தெரியும்.

பதற்றத்தை ஏற்படுத்தினால் ரஷியா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே இந்த அத்துமீறல் நடத்தப்பட்டுள்ளது என்றாா் விளாதிமீா் புதின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here