நெருங்க நினைத்தால் ரத்தக்களரியை பார்ப்பீர்கள்!

 

சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டதாக ஜின்பிங் இறுமாப்பு பேச்சு!

பெய்ஜிங்:

சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது.. என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மிக வலிமையான உரையை தன் நாட்டு மக்கள் முன்னிலையில் நிகழ்த்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தனது உரையின் மூலம் நேரடி சவாலை அவர் விடுத்துள்ளார்.

உலக நாடுகள் எல்லாம் இப்படி விக்கித்து போய் இருக்கும் நிலையில், கொரோனா முதலில் பரவிய சீனா மட்டும் நேற்று மிக விமரிசையான நூற்றாண்டு கொண்டாட்டங்களை மேற்கொண்டது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 1000 ஆண்டுகள் முடிந்ததை அடுத்து அந்த நாடு நேற்று விழாக்கோலம் பூண்டது.

1921 ஜூன் மாதம் சீனாவின் ஷாங்காய் பகுதியில் மாவோ மற்றும் மற்ற சில மார்க்சிஸ் லெனினிஸ்ட் கொள்கை கொண்டவர்கள் சேர்ந்து உருவாக்கிய கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி. அதன்பின் கடந்த 100 வருடங்களாக பல போராட்டங்கள், போர்கள், சுதந்திர போராட்டம், மோதல்கள், சர்வதேச அழுத்தங்கள், வறுமை, சதி என்று பல எதிர்ப்புகளை கடந்து, உலகின் மிக வலிமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை அந்த நாடு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஒரு நாள் கொண்டாட்டமாக இல்லாமல் அடுத்த சில வாரங்களுக்கு கொண்டாடும் வகையில் சீனாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தியான்மென் சதுக்கத்தில் மாவோவின் பிரம்மாண்ட புகைப்படம் முன் நின்று உரை நிகழ்த்தி, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்

சுதந்திரத்திற்கு பின் சீனாவின் முதல் சுதந்திர பிரகடனம் இதே இடத்தில்தான் 1949 இல் வாசிக்கப்பட்டது. அதே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நின்று நேற்று ஜி ஜின்பிங் மாவோவின் உடையில், உரை நிகழ்த்தினார். ஜி ஜின்பிங் தனது உரையில், சீனா பல சவால்களை கடந்து உலகின் வலுவான நாடாக உருவெடுத்து இருக்கிறது. மிகப்பெரிய அடிமை நாடாக இருந்த நாம் சங்கிலியை உடைத்து உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்து இருக்கிறோம்.

 வறுமையில் இருந்த பல கோடி மக்கள், வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். சீனாவின் வளர்ச்சி உலகத்தையே மாற்றி உள்ளது. உலக நாடுகளை சீனா திரும்பி பார்க்க வைத்துள்ளது. சீனாவின் கட்டமைப்பு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. பல போர்களை, வறுமையை, வெளிநாட்டு சதிகளை நாம் கடந்து வந்து இருக்கிறோம்.

வரலாற்றில் மாற்றவே முடியாத புரட்சிகளை சீனா செய்து வருகிறது. உலக வரலாற்றில் சீனா முக்கிய இடம் பிடிக்க போகிறது. சீனாவின் பொருளாதாரம் புதிய உயரம் தொட்டுள்ளது. சீனாவின் எல்லைகளை காக்கும் ராணுவம் உலகத்தரம் வாய்ந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் சாலைகள் மிளிர்கின்றன. சீன மக்கள் உற்சாகமாக உள்ளனர்.

சீன மக்கள் என்று வெளிநாட்டு சக்திகளை நாட்டிற்குள் விட மாட்டார்கள். எங்களை அடிமைப்படுத்தவும், எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், எங்களை தாக்கவும் நாங்கள் என்றும் அனுமதிக்க மாட்டோம். சீனாவின் இரும்பு சுவர்களை தாக்க வேண்டும் என்றால் 1.4 பில்லியன் மக்களை நீங்கள் தாண்டி வர வேண்டும், எங்களை அடிமைப்படுத்த நினைத்தால் பெரிய இரத்தக்களரியை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.. என்று சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கையை விடுக்கும் வகையில் ஜி ஜின்பிங் பேசி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here