சிரியாவிலிருந்து மகனை மீட்கப் போலி நாடகம்: 10,500 ரிங்கிட் மோசடி செய்த முன்னாள் ஏஎஸ்பிக்கு கோலா திரெங்கானு நீதிமன்றம் கண்டனம்!

கோலா திரெங்கானு:

ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் வாலிபரின் தந்தையிடம், தகுந்த காரணமின்றி 10,500 ரிங்கிட் பணத்தைப் பெற்ற குற்றத்திற்காகப் முன்னாள் ‘ஸ்பெஷல் பிராஞ்ச்’ (Special Branch) பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரி ஒருவருக்குக் கோலா திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உதவிப் போலீஸ் சூப்ரிடெண்டண்ட் (ASP) முகமட் நஸ்லி முகமட் (வயது 44) என்பவரின் மனைவிக்கு இம்மாதம் பிரசவம் நடக்கவிருப்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்குச் சிறைத்தண்டனை விதிப்பதைத் தவிர்ப்பதாக நீதிபதி முகமட் அசார் ஒத்மான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர் 9 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திரெங்கானு மாநில ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவில் (E8) பணியாற்றிய முகமட் நஸ்லி, சிரியாவுக்குச் சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படும் அகமது நைம் என்ற வாலிபரைக் கண்காணிக்கும் அதிகாரியாகப் பொறுப்பு வகித்தார்.

அச்சமயத்தில், அந்த வாலிபரின் தந்தையான சைட் ஜூசோவை (Zaid Jusoh) அணுகிய நஸ்லி, ‘அக்கி முஸ்’ (Aki Mus) என்ற நபரின் உதவியோடு, அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் சிரியாவிலிருந்து அவரது மகனையும் குடும்பத்தையும் மலேசியாவிற்குப் பாதுகாப்பாக மீட்டு வர முடியும் என நம்ப வைத்துள்ளார்.

மகன் மீண்டும் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில், சைட் ஜூசோ கடந்த 2018-ஆம் ஆண்டு மே மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே 5 தவணைகளாக மொத்தம் 10,500 ரிங்கிட்டை நஸ்லியிடம் கொடுத்துள்ளார்.

“போர் முனையில் சிக்கியுள்ள தன் மகனையும் அவனது குடும்பத்தையும் மீட்கத் துடித்த ஒரு தந்தையின் அவல நிலையைத் தனது சுயலாபத்திற்காக இக்குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மிகக் கொடூரமாகப் பயன்படுத்தியுள்ளார். ஒரு பயங்கரவாத ஒழிப்பு அதிகாரி என்ற தனது பதவியைப் பயன்படுத்தி, எவ்வித முயற்சியும் எடுக்காமல் அவர் இப்பணத்தைச் சூறையாடியுள்ளார்,” என்று நீதிபதி முகமட் அசார் ஒத்மான் சாடினார்.

விசாரணையின் போது, தனக்கு வழங்கப்பட்ட பணத்தில் 4,500 ரிங்கிட் தனிப்பட்ட கடன் என்று நஸ்லி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதற்கான எவ்வித கடன் ஒப்பந்த ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

இவ்வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 165-இன் கீழ் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருந்த போதிலும், நஸ்லியின் மனைவி தனது 3-ஆவது குழந்தையைப் பெற்றெடுக்கவிருப்பதால், அவரது குடும்ப நிதிச் சூழலைக் கருத்தில் கொண்டு சிறைத்தண்டனைக்கு மாற்றாக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

“குற்றவாளியின் மனைவிக்கு இப்பொழுது பிரசவ காலம் இல்லையென்றால், இவருக்குக் கண்டிப்பான சிறைத்தண்டனையே பொருத்தமானதாக இருந்திருக்கும்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here