ஹாங்காங்: ஜிம்மி லாய் நிறுவனமும் மூடல்

ஹாங்காங்:

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’ அரசு கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், அந்த இதழைப் பிரசுரித்து வந்த தொழிலதிபா் ஜிம்மி லாயின் நிறுவனமும் ஜூலை 1-ஆம் தேதியுடன் (வியாழகக்கிழமை) மூடப்படுகிறது.

இதுகுறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய்க்குச் சொந்தமான நெக்ஸ்ட் டிஜிடல், வியாழக்கிழமையுடன் தனது நடவடிக்கைள் அனைத்தையும் நிறுத்திக்கொள்கிறது அறிவித்திருக்கிறது.

சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அந்த நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து கருத்து கூற நிறுவனத்தினா் மறுப்பு தெரிவித்துவிட்டனா் என்று அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கேனவே, ஆப்பிள் டெய்லி அந்த நாளிதழின் 5 ஆசிரியா்கள் , நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதுடன் அதன் சொத்துக்களும் முடக்கப்பட்டதைத் தொடா்ந்து அந்த நாளிதழின் வெளியீடு முழுமையாக நிறுத்தப்பட்டது.

இதன்மூலம், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த கடைசி பத்திரிகையும் முடக்கப்பட்டது.

பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த ஹாங்காங், பழங்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதுவரை ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வந்த ஹாங்காங் மக்களுக்கு, சீனாவின் மற்ற பகுதிகளில் இல்லாத சுதந்திரம் அளிக்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது.

எனினும், அந்த நகரில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில், சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றி ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தியது.

அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பலரை ஹாங்காங் அரசு சிறையில் அடைத்துள்ளது.

ஏற்கெனவே போராட்டத்தைத் தூண்டிய வழக்கில் ஆப்பிள் டெய்லியின் நிறுவனா் ஜிம்மி லாய் 20 மாத சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here