யாங்கூன்:
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து மியன்மார் விடுதலை பெற்றதன் 78-வது சுதந்திர நாளை (ஜனவரி 4, 2026) முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகளை விடுதலை செய்ய ராணுவத் தளபதி மின் அவுங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார்.
மியன்மாரின் தேசிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு மன்றத்தின் அறிக்கைப்படி, மொத்தம் 6,134 உள்நாட்டு சிறைக்கைதிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 52 வெளிநாட்டுச் சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக மியன்மாரிலிருந்து வெளியேற்றப்பட்டு தத்தம் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் எஞ்சியிருந்த பழைய தண்டனை காலத்தையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாங்கூனில் உள்ள புகழ்பெற்ற இன்செயின் (Insein) சிறைச்சாலைக்கு வெளியே நூற்றுக்கணக்கான குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை முதல் காத்துக் கிடக்கின்றனர். தங்கள் உறவினர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஏந்தியபடி, கண்ணீருடன் அவர்கள் காத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ராணுவ ஆட்சியைக் கைப்பற்றலுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது மியன்மாரில் கட்டங்கட்டமாக ஒரு மாதம் நீடிக்கும் தேர்தலை இராணுவம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலை ஒரு “கண்துடைப்பு” என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்து வரும் நிலையில், இந்த மன்னிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும், மியன்மாரின் மக்களாட்சித் தலைவி ஆங் சான் சூகி போன்ற முக்கிய தலைவர்கள் இன்னும் சிறையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் புத்த மதப் பண்டிகைகளின் போது கைதிகளை விடுதலை செய்வது மியன்மாரில் வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதில் விடுதலையாகும் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.




















