அசால்ட்டாக செய்த மயில்சாமி அண்ணாதுரை

69 முறை  அமெரிக்கா  தோல்வி.

நீங்கள் பள்ளி மாணவனாக பொதுத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் சமயத்தில் ஜோதிடர் ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து பெற்றோர் முன்னிலையில் உங்கள் ஜாதகத்தில் இனி மேல் படிப்பு படிக்கும் யோகம் இல்லை என்று சொல்லி இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அந்த தேர்வை எப்படிப்பட்ட மனநிலையுடன் எழுதச் சென்றிருப்பீர்கள்? என்று நினைத்து பார்க்க முடிகிறதா?

இதே போன்றதொரு பிரச்சினையையை தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் சமயத்தில் எதிர்கொண்ட மாணவர் ஒருவர், ஜோதிடரின் கணிப்பை தவிடுபொடியாக்கி அம்மாவட்டத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். அதுமட்டுமில்லாமல் பிற்காலத்தில் அம்மாணவர் ஜோதிட சாஸ்திரத்தில் வரும் கிரகங்களான சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் கூட விண்கலம் அனுப்பும் அளவிற்கு சாதனை படைப்பான் என்பதை அந்த ஜோதிடர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அப்படிப்பட்ட சாதனை மனிதர்தான் மயில்சாமி அண்ணாதுரை.

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தினமாகும். அன்றைய தினம்தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது மங்கள்யான் விண்கலம்.

இந்த சாதனையை நிகழ்த்த 19 முறை முயற்சி செய்திருந்தது அமெரிக்கா, 16 முறை முயற்சி செய்திருந்தது ரஷ்யா, முதல் முயற்சியில் தோற்றிருந்தது ஜப்பான், ஆனால் முதல் முயற்சியிலேயெ செவ்வாய்க்கு செயற்கை கோளை அனுப்பிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த சாதனையை வெறும் 450 கோடியிலே இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தது.

இதனால் செவ்வாய் கிரகத்தை ஆராயும் முதல் ஆசிய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த சாதனைக்கு மங்கள்யானின் திட்டக்குழு இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் வழிநடத்துதல் மிக முக்கியமாக இருந்தது.

1958-ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் நடுத்தர ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. இவரின் முதலாம் வகுப்பு பள்ளிப்படிப்பு மாட்டுக் கொட்டகையில் தொடங்கி மங்கள்யானில் நிறைவடைந்தது.

தனது தந்தையை போலவே ஆசிரியாராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மயில்சாமி அண்ணாதுரைக்கு கணிதம், அறிவியல் பாடத்தில் ஏற்பட்ட காதல் அவரை பொறியியல் கல்லூரியை நோக்கி அழைத்துச் சென்றது. கோவை அரசு பொறியியல் கல்லூரியில் முதுகலை பொறியியல் முடித்தவர் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோவில் வேலைக்கு சேர்ந்தார்.

தான் பிறந்த சமயத்தில் கண்ணீர் கூட வராத மயில்சாமி அண்ணாதுரையின் கண்கள்தான் நிலவில் தண்ணீரை தேடி அலைந்தது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று 69 முறை அமெரிக்கா ஆய்வு நடத்தி தோற்றிருந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்து, 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அனுப்பபட்ட சந்திரயான்-1 விண்கலம்தான் நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை உலகிற்கு சொன்னது.

வீட்டில் நம் அனைவரையும் போல நிலாச்சோறு உண்டு வளர்ந்த மயில்சாமி அண்ணாதுரை நிலாவிற்கே செயற்கைகோள் விடும் அளவிற்கு வளர்ந்ததற்கு என்ன காரணம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுமாயின் அதற்கு மயில்சாமி அண்ணாதுரை அளித்த பதில்கள் இதுதான்..

தனது தந்தையான அண்ணாதுரை தனக்கு சிறுவயதில் இருந்தே நீ எதை செய்தாலும் மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதலாகவும் கொஞ்சம் வித்தியாசமாகவும் செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து சொல்லி வந்ததாக கூறும் மயில்சாமி அண்ணாதுரை. இந்த அறிவுரைதான் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிய தனக்கு பெரிதும் உதவியதாக கூறுகிறார். அமெரிக்கா நிலவில் தண்ணீரை தேடி 69 முறை பல்வேறு பகுதிகளை ஆராய்ந்து கல்லையும் மண்ணையும் பூமிக்கு கொண்டு வந்து சோதித்தித்தும் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் சந்திரயான் விண்கலம் இந்த 69 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஆராய வேண்டும் என்ற தனது கொஞ்சம் வித்தியாசமான செயல்தான் நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை உறுதி செய்ய காரணமாக அமைந்ததாக கூறுகிறார்.

தாய் மொழியின் வீரியம் அறிவியல் துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்களின் சுயசிந்தனைக்கு பலமாக இருக்கும் என்பது 11ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் மட்டுமே படித்த சாதனை தமிழன் மயில்சாமி அண்ணாதுரையின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது. இன்று தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்த்துகள் குவிகின்றன. நாமும் வாழ்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here