புத்ரா ஜெயா, (ஜூலை 2):
ஆகஸ்டு மாதத்திற்கு முன் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று நடைமுறைச் சட்ட அமைச்சர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாடாளுமன்ற சபையின் தலைவராக இருக்கும் நாட்டின் பிரதமர் முஹிடின் யாசின், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பு விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
“இது ஜூலை 7 ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிச் செய்யப்படும்” என்றும் தக்கியுடின் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் நிர்வாகம் தொடர்பான அனைத்து விடயங்களிலும் மத்திய அரசு தொடர்ந்தும் மாட்சிமை தங்கிய மாமன்னரின் கருத்துக்களுக்கு இணக்கமாகவே செயல்படும் என்று தக்கியுடின் கூறினார்.
நேற்று (ஜூலை 1), மேன்மை தங்கிய பேரரசர் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







