கரம் சேர்வோம், தமிழ்ப்பள்ளியை காப்போம்

பி.ஆர்.ராஜன்

கிளாந்தானில் உள்ள ஒரேயொரு தமிழ்ப்பள்ளியை காத்திடும் தார்மீக கடமையும் பொறுப்பும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு இருக்கிறது. தேசிய வகை பாசிர் காஜா தமிழ்ப்பள்ளியை அதன் பெற்றோர்– ஆசிரியர் சங்கம் அரும்பாடுபட்டு காப்பாற்றி வருகிறது.

மணிவண்ணன் ஆறுமுகம் தலைமையிலான பெற்றோர் –ஆசிரியர் சங்கம் இந்த பள்ளியில் படிக்கும் 35 மாணவர்கள், 12 பாலர் வகுப்பு மாணவர்கள்,  ஆகியோருக்கு அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறது. 7 ஆசிரியர்கள் கல்வி போதிக்கின்றனர்.

1960ஆம் ஆண்டுகளில் கிளாந்தானில் 10 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டன.  காலவோட்டத்தில் இப்பள்ளிகள் அனைத்தும் அக்கம்பக்கத்தில் உள்ள பள்ளிகளுடன் இணைந்தன.

தாகூ, பாகி, கெரிலா தோட்டம், பாசிர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளிகள் என 4 பள்ளிகளாக அவை செயல்பட்டன. ஆனால் இப்போது பாசிர் காஜா தமிழ்ப்பள்ளி மட்டுமே  செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

முன்னாள் ஆசிரியரான மணிவண்ணன்  மிகவும்  அர்ப்பணிப்புடன் இந்த பள்ளியை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சுற்று வட்டாரங்களிலிருந்து மாணவர்களை ஏற்றி வருவதற்கு வேன்களை  பயன்படுத்துகிறது.  இதற்காக 3 ஓட்டுநர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.

பாலர் பள்ளி ஆசிரியருக்கும் பெற்றோர்– ஆசிரியர் சங்கம்தான் ஊதியம் வழங்குகிறது. இவர்களுக்கான இபிஎஃப், சொக்சோ சந்தாக்களையும் செலுத்தி வருகிறது. இதுதவிர பேருந்து பராமரிப்பு செலவு மாணவர்களுக்கான காலை, மதிய உணவையும் பெற்றோர் – ஆசிரியர் சங்கம் வழங்குகிறது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் 7,700 ரிங்கிட்டை பெற்றோர் – ஆசிரியர் சங்கம் செலவிட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் நல்லுள்ளங்களின் ஆதரவில் இந்த நிதி திரட்டப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு முழுமைக்கும் கிட்டத்தட்ட 1 லட்சம் ரிங்கிட் தேவைப்படுகிறது. இந்த நிதி திரட்டும் திட்டத்தை மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ எஸ்.கோபி ஒரு கணிசமான தொகையை மணிவண்ணனிடம் நேரில் வழங்கி தொடங்கி வைத்தார்.

மக்கள் ஓசையின் இந்த முயற்சியில் ஆசிரியர் ந.பச்சைபாலன் தலைமையிலான காஜாங் அறம் செய்வோம் இயக்கம் கரம் சேர்ந்தது. இந்த அமைப்பு 1,000 ரிங்கிட் வழங்கியது.

மேலும் பல நல்லுள்ளங்களின் வழி நிதி திரட்டும் முயற்சியில் காஜாங் அறம் செய்வோம் இயக்கம் களம் இறங்கியிருக்கிறது. பலர் இதற்கு ஆதரவு தெரிவித்து பள்ளி பெற்றோர் – ஆசிரியர் சங்க வங்கிக் கணக்கில் நன்கொடைகளை சேர்த்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 29ஆம் தேதி வௌ்ளிக்கிழமை வரையில் கிட்டத்தட்ட 17,000 ரிங்கிட் திரட்டப்பட்டிருக்கிறது என்று மணிவண்ணன் தகவல் அளித்திருக்கிறார்.  திட்டத்தின் இலக்கு 1 லட்சம் ரிங்கிட் ஆகும். விரைவில் ஓர் அறவாரியம் தொடங்கி அதன் மூலம் நிரந்தர வருமானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

பாசிர் காஜா தமிழ்ப்பள்ளியை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கு வௌிமாநிலங்களிலிருந்து மாணவர்களை கொண்டு வருவதற்கும் முயற்சி செய்யப்படுகிறது.

தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் பதியும் பெற்றோருக்கு இங்கேயே வேலை தேடிக்கொடுப்பதற்கும் தங்கும் வசதியை ஏற்பாடு செய்திடுவதற்கும் பெற்றோர் –ஆசிரியர் சங்கம் தயாராக இருக்கிறது.  இத்தமிழ்பள்ளியை காப்பதற்கு இந்திய சமுதாயம் கரம்சேர வேண்டும்.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் போதகர் ஸாக்கிர் நைக் தொடுத்த அவதூறு வழக்கில் பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி 15 லட்சத்து 20,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அதற்கான காலக்கெடுவையும் விதித்தது.

இந்திய சமுதாயம் ஒரே வாரத்தில் இந்த தொகையை வாரி வழங்கியது. இந்த சமுதாயம் தான் கிளாந்தானில் உள்ள பாசிர் காஜா தமிழ்ப்பள்ளியை காப்பாற்றுவதற்கு கரம்சேர வேண்டும். முடிந்ததை கொடுங்கள். ஒரு தமிழ்ப்பள்ளியை காப்பாற்றினோம் என்று நெஞ்சுயர்த்தும் பெருமையை இதயத்தில் சுமந்து நில்லுங்கள்.

கல்வி, வாழ்வின் ஒளி என்பதை நினைவில் வைத்து கிளந்தான் கோலக்கிராயில் உள்ள பாசிர் காஜா தோட்ட தேசிய வகை ஆரம்பத் தமிழ்ப்பள்ளியை ஒரே இதயமாக ஒன்றுதிரண்டு காப்பாற்றுவோம்.

தொடர்புக்கு: மணிவண்ணன் ஆறுமுகம் 019 – 943 1469. PIBG SEKOLAH RJK(T) LDG PASIR. NO AKAUN 003024109161 Maybank என்ற  வங்கிக் கணக்கில் நன்கொடையை செலுத்தி அதன் ரசீதை மணிவண்ணனுக்கு அனுப்பி வைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here