கொரோனா 3 ஆம் அலை அக்டோபரில் ஆதிக்கம் செலுத்துமாம்!

தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே தடுக்க முடியும்!

கொரோனா 3 ஆவது அலை அக்டோபரில் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகளை இந்த அலை அதிகம் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 3 ஆவது அலை வீரியத்துடன் செயல்படாது. எனவே அச்சப்பட ஒன்றுமில்லை என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

கொரோனாவுக்கு தடுப்பூசிகள் வந்து விட்ட நிலையில், இந்த ஊசிகளே டெல்டா பிளஸ் வைரஸை எதிர்த்து போராடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலையில், புதிய வகை வைரஸை எப்படி இது எதிர்கொள்ளும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

இதற்கிடையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்க நிறுவனம் தங்கள் தடுப்பூசி டெல்டா பிளஸ் மற்றும் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாச கோளாறுகளுக்கு எதிராக வீரியத்துடன் செயல்பட்டு 8 மாதங்கள் வரை பாதுகாப்பு கவசமாக விளங்கும் என்றும் ஒரு டோஸ் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.

டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் தான் முதன்முதலில் காணப்பட்டது. தற்போது உலக அளவில் 96 நாடுகளில் வேகமாக தடம் பதித்து வருகிறது. இதன் மாறுபாடுகளை அடையாளம் காணும் திறன்கள் குறைவாக இருப்பதால், அனைவரும் இதை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

மூன்றாவது அலை அச்சுறுத்தல் ஒருபக்கம், டெல்டா பிளஸ் ஆதிக்கம் மறுபக்கம் என்று தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ்களால் மக்களுக்கு அடிமேல் அடி விழுந்து வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. வந்த பின் நோவதை விட வரும் முன் காப்போம் என்பதற்கு இணங்க மக்கள் வீட்டிலும், வெளியிலும் வெகு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து சமுதாயத்துக்கு உதவி புரிய வேண்டும். அலட்சியம் காட்டினால், டெல்டா பிளஸ் ஆதிக்கம் செலுத்தி ஆபத்தில் முடியும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here