பாம்பன் பாலத்தில் பயணிகள் ரயில் ஜூலை 14 வரை ரத்து

ராமேஸ்வரம் :

பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகளுடன் ரயில்கள் செல்ல அனுமதி வழங்கப்படாததால், 14 ஆம் தேதி வரை ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியை நாட்டின் பிற நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடலின் நடுவே கட்டப்பட்டது பாம்பன் ரயில் பாலம். கப்பல்கள் செல்லும்போது திறந்து வழிவிடும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பிரச்னையை சீர் செய்யும் பணி பாலத்தில் கடந்த சில நாட்களாக நடந்தது.

இதனால் பாலத்தில் ரயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டதுடன், ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. ஐந்தாவது நாளாக நேற்றும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்தே அனைத்து ரயில்களும் இயக்கபட்டன.

முதற்கட்ட சீரமைப்பு பணிகள் நேற்று முடிவடைந்ததால் பாம்பன் பாலத்தில் பயணிகள் இல்லாமல் வெறும் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் வரும் 14 ஆம் தேதி வரை பயணிகள் இல்லாமல் காலியான பெட்டிகளுடன் ரயில்கள் சென்றுவர தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயணிகளுடன் ரயில்களை இயக்க தற்போது அனுமதி வழங்கவில்லை. இதனால் வரும் 14 ஆம் தேதி வரை ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்படுகிறது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்தே அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என்பதால் வெளியூர்களில் இருந்து பயணிகளுடன் வரும் ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் குறிப்பிட்ட இடங்களுக்குப் புறப்பட்டுச் செல்லும்.

நேற்று ராமேஸ்வரம் வந்த திருச்சி, சென்னை ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பிற்பகலுக்கு மேல் குறித்த நேரத்தில் மீண்டும் அங்கிருந்து பயணிகளுடன் திருச்சி , சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

பாலத்தில் தற்போது காலி ரயில் பெட்டிகள் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டதால், வெளியூர்களில் இருந்து பயணிகளுடன் மண்டபம் வந்து சேரும் ரயில்கள், பயணிகள் இறங்கியவுடன் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்படும். அங்கு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்தபின் மீண்டும் மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here