கோலாலம்பூர், (ஜூலை 5) :
நேற்று (ஜூலை 4) கோலாலம்பூர்- கோல சிலாங்கூர் அதிவேக நெடுஞ்சாலை (LATAR) ஃப்ளைஓவர், பரித் மஹாங்கின் சாலைகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, சாலைகளில் வழுக்குதல் காரணமாக பல வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெராம் மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADUN) முகமட் ஷைட் ரோஸ்லி இந்த விவகாரம் குறித்த தகவல்களை உள்ளூர்வாசிகளிடமிருந்து பெற்றதாகக் கூறினார்.
தகவலறிந்தவுடன் தானே நேராக அந்த இடத்திற்குச் சென்றதாகவும் சாலைகளில் எண்ணெய் கசிவு இருந்ததை தாம் பார்த்ததாகவும் கூறினார்.
“நான் வந்தவுடனேயே, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோலா சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை (BBP) தொடர்பு கொண்டேன்” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) இரவு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் நோரசாம் காமிஸ் இச்சம்பவம் தொடர்பில் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 4)!இரவு 10.50 மணிக்கு தமது துறைக்கு இச்சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு வந்தது என்றும் அதனைத் தொடர்ந்து கோலா சிலாங்கூரின் (BBP) மொத்தம் ஏழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும் கூறினார்.
“சாலையில் 30 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் கசிவை நாங்கள் கண்டோம், உறுப்பினர்கள் தீயணைப்பு இயந்திரங்களிலிருந்து தொட்டி நீரை வெளியேற்றி துரிதமாக செயல்பட்டனர்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு சுமார் 30 நிமிடங்கள் எடுத்தது என்றும் நேற்று இரவு 11.39 மணிக்கு சாலையை தூய்மைப்படுத்த முடிந்தது என்றும் கூறினார்.
“இருப்பினும், எத்தனை வாகனங்கள் கட்டுப்பாடுகளை இழந்தது என்பது பற்றிய தகவல்களை எங்களால் பெற முடியவில்லை என்றும் மேலும் கசிவு பகுதியை சுத்தம் செய்ய மட்டுமே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.










