மறுசுழற்சி தொழில் செயல்பட அனுமதியளியுங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இதில் அடங்கியிருக்கிறது!

கிள்ளான், ஜூலை 5-

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கினை ஆற்றும் மறுசுழற்சி தொழில் செயல்பட அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அதனை ஒரு தொழிலாகப் பார்க்காமல் நாட்டின் சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்கும் ஒரு துப்புரவுத் தொழிலாகப் பார்க்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.

நாளொன்றுக்கு 30 ஆயிரம் டன் எடை கொண்ட மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன எனும் வீடமைப்பு ஊராட்சி அமைச்சின் கணிப்பு மறுசுழற்சி தொழில்துறை முக்கிய துறைகளில் ஒன்றென்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மறுசுழற்சி நடவடிக்கையில் ஈடுபடும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கவில்லை. அதனால் மறுசுழற்சி செய்யும் நடவடிக்கையும் அப்படியே முடங்கிப் போயுள்ளது.

ஒவ்வொரு நாளும் மிக அதிகமான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் சுமார் முப்பது விழுக்காடு மறுசுழற்சி செய்யும் பொருட்கள் உள்ளன. காகிதங்கள், நெகிழிப் பைகள், போத்தல்கள், உலோகப் பொருட்கள் போன்ற பொருட்கள் மறுசுழற்சிக்கு உட்பட்டவை என கணபதிராவ் விவரித்தார்.

மறுசுழற்சி சம்பந்தப்பட்ட தொழில்துறை செயல்பட அனுமதி வழங்காத நிலையில் இவை அனைத்தும் மண்ணுக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. மண்ணில் மக்காமல் நீண்ட நாட்களுக்கு அழியாமல் மண்ணுக்குத் தீமையை ஏற்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

இதனைத் தூரநோக்கு சிந்தனையோடு நாம் பார்க்கும் போது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வோர் உயிரினங்களுக்கும் கேடாகவே அமைகிறது எனக் குறிப்பிட்ட அவர், மறுசுழற்சி தொழில்துறைக்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம் என சுட்டிக்காட்டினார்.

நம்முடைய அன்றாட ம் வீசுகின்ற குப்பைகளை சரியான முறையில் கையாள்வது அவசியம். அத்தகைய பணியை மேற்கொள்வதற்கு மறுசுழற்சி தொழில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேன்டும். இது முக்கியமான தொழில்துறை இல்லை என்று அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சு அவர்களின் விண்ணப்பங்களைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

ஒவ்வொரு தொழில்துறையும் பல்வேறு கூறுகளின் அடிப்படையில் ஆராயப்படுகின்ற வேளையில் அவை எவ்வாறு மக்களின் வாழ்க்கை, எதிர்காலம் ஆகியவற்றோடு ஒன்றிணைந்திருக்கின்றது என்பதையும் ஆராய வேண்டும்.

அதன் பின்னரே மத்திய அரசாங்கம் செயல்படுவதற்கான முக்கிய துறைகளின் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட கணபதிராவ், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கும் மிக முக்கியமான மறுசுழற்சி தொழிலுக்கு அனுமதி வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பி.ஆர்.ஜெயசீலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here