ஜோகூர் பாரு, (ஜூலை 6) :
ஜோகூரின் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசிகளில் 20,000 மருந்துகளை அம் மாநிலத்திற்கு விநியோகிப்பதற்காக பெற்றுள்ளார்.
இதை துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.
“நாங்கள் எதிர்காலத்தில் அதிகமான சினோவாக் / ஃபைசர் தடுப்பூசிகளை பெறுவதில் பணியாற்றி வருகிறோம். “ஆளுநரும் அமைச்சரும் எங்களுக்கு உதவலாம் மற்றும் மக்களுக்கு அதிகமான தடுப்பூசிகளை விநியோகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் துங்கு இஸ்மாயில் பதிவில் தெரிவித்தார்.
இது நடவடிக்கைக்கான நேரம் என்றும் கூறிய அவர், “மக்களுக்கு சேவை செய் (Serve the People)” என்ற அழைப்போடு அறிக்கையை நிறைவு செய்திருந்தார்.
தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 4), துங்கு இஸ்மாயில் மாநில அரசுக்கு அழைப்பு விடுத்தார்.
“மக்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வீட்டில் சிக்கித் தவிக்கிறார், அவர்கள் இப்போது மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று நான் கவலைப்படுகிறேன். “அதுமட்டுமின்றி, நீடித்த முடக்க நிலைமை காரணமாக சமூக-பொருளாதார சிக்கல்களும் எழுந்துள்ளன.
SOP கள் முழுமையான மற்றும் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். “வெறுமனே மக்களை வீட்டிற்குள் பூட்டுவது இனி பொருந்தாது” என்றும் துங்கு இஸ்மாயில் தனது முகநூல் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட், மாநில சுற்றுலா, இளைஞர் மற்றும் விளையாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஒன் ஹாபீஸ் காசி மற்றும் மாநில செயலாளர் டத்தோ அஸ்மி ரோஹானி ஆகியோருடனான சந்திப்பிற்கு பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
மாநில அரசு நேரடி கொள்முதல் மூலம் தடுப்பூசிகளைப் பெறுவது உட்பட, ஜோகூர் மக்களுக்கான தடுப்பூசி செயல்முறையை பல்வேறு முயற்சிகளின் மூலம் விரைவுபடுத்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன் ,” என்றும் துங்கு இஸ்மாயில் கூறினார்.
மேலும் இந்த தொற்றுநோயை சமாளிப்பதில் நமது நாடு வெற்றி பெறும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
ஜோகூர் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, ஜூலை 4 ஆம் தேதி நிலவரப்படி, ஜோகூரில் மொத்தம் 460,094 பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர், மேலும் 268,137 பேர் இரண்டு அளவுகளையும் பூர்த்தி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









