வங்களாதேசத்திலுள்ள உணவுத்தொழிற்சாலையில் தீ; 52 பேர் பலி!

டாக்கா, ஜூலை 10 :

வங்காளதேசத்திலுள்ள உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் ரூப்கஞ்சில் ஹசீம் உணவுத் தொழிற்சாலை உள்ளது. நேற்று பிற்பகல் குறித்த தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளங்களிலிருந்து கீழே குதித்த பலர் படுகாயமடைந்துள்ளனர்.

6 தளம் கொண்ட இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் பலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் மீட்பு பணியை தொடர்வதில் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர் என்றும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் கீழ் தளத்திலிருந்து 40 தொழிலாளர்கள் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காணவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், விபத்து நடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here