தடுப்பூசி விநியோக சிக்கலுக்காக மனம் திறந்த ஆஸி. பிரதமர்

மன்னிப்பீர்!-மனம் திறக்கிறார் மோரிசன்

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணிகள் குறைந்த காரணத்தால், சிட்னி உள்ளிட்ட அந்நாட்டின் முக்கியமான சில இடங்களில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. இதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக அதிகப்படுத்த வேண்டுமென அந்நாட்டு மக்கள் பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் காரணத்தால், அவர் தற்போது இக்கட்டான சூழலை அங்கு எதிர்கொண்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா, பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல வல்லுநர்களின் கருத்துப்படி பணக்கார நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதென்பது மிக எளிதாக இருக்கிறது.

அந்தவகையில் ஆஸ்திரேலியாவுக்கும் தடுப்பூசி மிக எளிதாகவே கிடைக்கிறது. ஆக தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் அங்கில்லை. அப்படியிருந்தும்கூட கிடைக்கும் தடுப்பூசியை விநியோகிப்பதில் அந்நாட்டு அரசு ஆர்வம் காட்டாமல் இருந்ததே, தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. இப்போதுவரை ஆஸ்திரேலியாவில் 11% சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது, பணக்கார நாடுகள் அனைத்தின் பட்டியலுடனும் ஒப்பிடும்போது மிக மிக குறைவாக இருக்கிறது.

தங்களின் இந்த விநியோகம் குறித்து பேசியிருக்கும் அதிபர், ‘இந்தாண்டு தொடக்கத்தில், எத்தனை சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி விநியோகப்பட்டிருக்கும் என சில திட்டமிடல்களை நாங்கள் வகுத்திருந்தோம். ஆனால் இப்போது அதை எங்களால் எட்டமுடியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை, நானே அனைத்து பொறுப்புகளையும் நேரடியாக ஏற்கிறேன். அதேபோல, தடுப்பூசி விநியோகப்படுவதில் உருவாகும் சவால்களுக்கும் நானே பொறுப்பேற்கிறேன். சில விஷயங்கள் இப்போதுவரை நம் கட்டுக்குள் இருக்கிறது; சில விஷயங்கள் மட்டும் இல்லை. இருப்பினும், பொறுப்புகளை ஏற்கிறேன்’ எனக்கூறியுள்ளார் அவர்.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, சிட்னியில்தான் தற்போது கொரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது. சிட்னியில் பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளும் பொதுமுடக்கமும் அமலிலுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் யாவும் தொடர்ந்து அதிகப்படுத்தப்படுவதால் அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். முக்கியமாக இவர்களை முன்னிறுத்தியே, இன்று மன்னிப்பு கோரியுள்ளார் ஸ்காட் மோரிசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here