ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

பத்திரமாக இருங்கள்; தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள்:

ஆப்கானிஸ்தானில் தலிபன்களின் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் டானிஷ் சித்திக்கி படுகொலை செய்யப்பட்டார். ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கும் தலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலை படம்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்காக இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஆப்கானிஸ்தானுக்கு வருகைதரும், அங்கு வசிக்கும், வேலைநிமித்தமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் தங்களின் பணியிடத்திலும் சரி, வசிப்பிடத்திலும் சரி மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் இந்த அறிக்கை விடுக்கப்படுகிறது.
இந்தியர்கள் அநாவசியமாக வெளியே வருவதைத் தவிர்க்கும்படி வேண்டுகிறோம். சாலையில் பயணம் செய்யும்போது தீவிரவாதிகளின் லகுவான தாக்குதல் வாகனங்களான பாதுகாப்பு வாகனங்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் வாகனத்திலிருந்து மிகுந்த இடைவெளியில் பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

கூட்டம் நிறைந்த சந்தைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், பொது இடங்களை இன்னும் சில காலத்துக்கு தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் அவரவர் ஊழியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதேபோல், ஆப்கன் மோதல்கள் குறித்து செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகவியலாளர்கள் அனைவருமே தூதரகத்தில் பாதுகாப்புப் பிரிவைத் தொடர்பு தங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்துவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் எந்தெந்தப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் செல்கிறார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறியது. இந்நிலையில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

அண்மையில், காபுல், பான்ஜிர் பகுதியில் இருந்து 50 இந்திய தூதரக அதிகாரிகள் அவர்கள் குடும்பத்தினர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் விமானப்படை சிறப்பு விமானம் மூலம் பாகிஸ்தான் வான்வழியைத் தவிர்த்து பத்திரமாக டெல்லி வரவழைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here