தமிழ்நாட்டில் தொடரும் அரசியல் குழப்பம்; ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழல் ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பதற்குப் பதிலாக, ‘ஆளுநரின் தீர்ப்பே அரசின் தீர்ப்பு’ என்பது போன்ற ஒரு நெருக்கடியான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் காட்டி வரும் பிடிவாதம், சட்ட ரீதியாகப் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அதேவேளையில், பெரும்பான்மைக்குத் தேவையான மீதமுள்ள 5 இடங்களை ஈடுசெய்ய விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சிகள் இன்னும் தங்களின் உறுதியான முடிவை அறிவிக்காமல் தயக்கம் காட்டி வருவது இழுபறியை நீட்டிக்கச் செய்கிறது.

ஒருவேளை எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி (President’s Rule) அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால், அடுத்த ஓராண்டு காலத்திற்கு மாநில அரசின் அதிகாரம் தளர்ந்து, மத்திய அரசின் நேரடி ஆதிக்கம் தமிழகத்தின் மீது பாயும் வாய்ப்பு ஏற்படும்.

இதன் மூலம் இதுவரை தமிழகம் எதிர்த்து வந்த புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு, பரந்தூர் விமான நிலையம் மற்றும் எட்டு வழிச்சாலைத் திட்டங்கள் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படும் நிலை உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

விஜய் முதல்வராகக் கூடாது என்பதற்காக, பல தசாப்தங்களாகப் பகைமைகொண்டிருந்த திமுகவும் அதிமுகவும் ‘கூட்டணி ஆட்சி’ என்ற பெயரில் ஒன்றிணையப் போவதாகத் தகவல்கள் பரவுவது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘திராவிடம்’ என்ற அடையாளத்தைத் தாண்டி ஒரு தமிழர் ஆட்சிப் பீடத்தில் அமர்வதைத் தடுக்கப் பரம எதிரிகள் கைகோர்ப்பது, தமிழக இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் போன்றவர்கள் முன்வைத்த ‘திராவிட ஒழிப்பு’ அரசியல் இப்போது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதமாகியுள்ளது.

அதிகாரத்தை இழக்க விரும்பாத திராவிடக் கட்சிகளின் இந்த நகர்வுகள், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்றதொரு மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்திட்டு, ஒட்டுமொத்தத் தமிழர்களையும் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக ஒன்றிணைய வைக்கும் சூழலை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here