உணவோ, உதவியோ அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் இன அடிப்படையில் அல்ல என்கிறார் ஜோகூர் சுல்தான்

JOHOR RULER SULTAN IBRAHIM IBNI ALMARHUM SULTAN ISKANDAR

கோலாலம்பூர், ஜூலை 26 :

இனம் அல்லது இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல்,உணவோ, உதவியோ அனைவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும் என்று ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் இன்று தெரிவித்தார்.

ஜோகூரின் ஸ்கூடாயில் உள்ள ஒரு மளிகைக் கடையில் உணவு, உதவி வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த அறிவித்தலில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டதாகக் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக இக்கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நீங்கள் உதவ விரும்பினால், தயவுசெய்து தேவைப்படுபவர்களுக்கு உதவுவதன் மூலம் உண்மையாக இருங்கள். இன அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டாம் ”என்று சுல்தான் இப்ராஹிம் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் மாநிலத்தில் முக்கியமான கொள்கைகள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நமது ஒற்றுமைதான் நமது சமூகத்தின் முதுகெலும்பாகும். அனைத்து மக்களுக்கு உதவுவதை நாம் நோக்கமாக கொள்ள வேண்டும் அதை விடுத்து இனம் அல்லது மதம் தொடர்பான பிரச்சினைகள் ஒருபோதும் எழக்கூடாது ” என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த அறிவுறுத்தல் வைக்கப்பட்டிருந்த கடையின் உரிமையாளர் பின்னர் புண்படுத்தும் அடையாளத்தை அகற்றி பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here