செம்போர்னா, ஜூலை 26:
புதிதாக பிறந்து ஒருநாளேயானதாக நம்பப்படும் ஒரு ஆண் குழந்தை, ஜாலான் தஞ்சோங் காப்போரில் உள்ள கம்போங் லஹாட் -லஹாட்டில் உள்ள செம்பனைமரங்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றுக் காலை 11 மணியளவில் அழகான குழந்தை ஒரு துணியில் மூடப்பட்டிருந்ததையும் அது உயிருடன் இருந்ததை கிராமவாசிகள் கண்டனர்.
செம்போர்னா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா இச் சம்பவம் பற்றிக் கூறுகையில், குழந்தை குறித்து தகவல் கிடைத்ததும், செம்போர்னா மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியது என்று கூறினார்.
தொப்புள் கொடியுடன் காணப்பட்ட அந்த குழந்தை 2.85 கிலோ எடையுடன் மிக ஆரோக்கியமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகவும், இப்போது செம்போர்னா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் தீவிர கண்காணிப்புக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக குழந்தையை சமூக நலத்துறையிடம் தாம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் மேலும் சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவித்தார்.
“ஒரு குழந்தையை வீசிய குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.