பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29:
நேற்று (ஜூலை 28) நிலவரப்படி நாடாளுமன்றத்தில் மொத்தம் 56 பேருக்கு கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இரண்டு எம்.பி.க்கள், ஆறு துணை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 48 அதிகாரிகள் என மொத்தமாக 56 பேருக்கு இத்தொற்று இனங்காணப்பட்டது என்று ஓர் அறிக்கையின் மூலம் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
இந்த 56 தொற்றுக்களில் 39 (69.6%) முழுமையாக தடுப்பூசிகளைப் பெறாதவர்கள் அல்லது தடுப்பூசியே போடாதவர்கள் என்று குறிப்பிட்டார்.
விசாரணைகள் மற்றும் ஆபத்து மதிப்பீடுகளின்படி, தொற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த தொற்றுக்கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிய விசாரணைகளும் நடத்தப்பட்டன, இதுவரை நான்கு நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
நேர்மறை மற்றும் நெருங்கிய தொடர்புகளை கொண்ட நபர்கள் நாடாளுமன்ற அமர்வில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை என்றும், சிறப்பு அமர்வு தொடங்கிய முதல் நாள் முதல் வீட்டு கண்காணிப்பு உத்தரவின் (HSO) கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய கோவிட் -19 நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அமர்வுகளின் காலத்தைக் குறைக்கவும் சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது என்றும் கூறினார்.
கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைப்பதே இந்த பரிந்துரையின் நோக்கம் என்றார்.
சிறப்பு அமர்வு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதிக்க ஜூலை 26 ம் தேதி நடந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது இந்த விடயம் முன்மொழியப்பட்டது என்றும் அவர் கூறினார்.










