என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஆய்வு

பெகாசஸ் ஸ்பைவேர் தயாரிப்பின் எதிரொலி 

ஜெருசலேம்:
பெகாசஸ் ஸ்பைவேர் எனும் மென்பொருளைத் தயாரித்த இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் உலகம் முழுவதும் பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இஸ்ரேல் அரசுக்கு நெருக்கமானதாக கருதப்படும் இந்நிறுவனம் டெல் அவிவ் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் எனப்படும் ஸ்பைவேர் தான் உலகம் முழுவதும் பேசுப்பொருளாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு இந்த ஸ்பைவேரை விற்றுள்ளது இந்நிறுவனம்.
இந்த ஸ்பைவேர் மூலம் பலரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக சர்வதேச பத்திரிகைகளின் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் என பலரையும் இந்த ஸ்பைவேர் மூலமாக ஒட்டுக்கேட்டுள்ளதாக அக்கூட்டமைப்பு தெரிவித்தது. மேலும், பல நாடுகளிலும் இதுபோன்ற ஒட்டுக்கேட்பு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை என்எஸ்ஓ நிறுவனம் மறுத்துள்ளன. இந்நிலையில், டெல் அவிவ் பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.ஓ நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் ஆய்வு நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த என்.எஸ்.ஓ நிறுவன அதிகாரிகள், ‘பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், இந்த ஆய்வு மூலம் நாங்கள் தவறிழைக்கவில்லை என்பதை நிரூபிப்போம்,’ என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here