சிறுத்தை தாக்கி வாலிபர் படுகாயம்!
திருச்சி-துறையூர் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஆங்கியம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், மலைக்கரடு உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த ஹரிபாஸ்கரன், 20 நேற்று மாலை 3:00 மணிக்கு, ‘செல்பி’ எடுப்பதற்காக, மலைக்கரடுக்கு சென்றுள்ளார்.
கரடில் உள்ள குகைக்கு முன், நின்று செல்பி எடுத்த போது, குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார்.
சத்தம் கேட்டதால், காட்டுப்பகுதியில், கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த துரைசாமி, 59, என்ற விவசாயி, சிறுத்தையிடம் சிக்கியவரை காப்பாற்ற முயன்றார். அவரையும், சிறுத்தை தாக்கி விட்டு, தப்பி ஓடியது.
படுகாயமடைந்த இருவரும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்த திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று, சிறுத்தை நடமாட்டத்துக்கான தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
தண்டோரா எச்சரிக்கைதுறையூர் அருகே, பச்சைமலை வனப்பகுதி உள்ளது. இங்கு, முயல், நரி, மான் போன்ற விலங்குகள் அதிகம் உள்ளன. சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்குகள் இருப்பதில்லை. தற்போது, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, மலைக்கிராம மக்கள் தெரிவிப்பதால், வனத்துறையினர் தண்டோரா போட்டு, எச்சரித்துள்ளனர்.