மாமன்னர் பிரதமரை நீக்க முடியுமா?
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் மட்டுமே என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் அதன் முரட்டு பிடிவாதத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
மாமன்னரை மதித்ததாகவே தெரியவில்லை. தாங்கள் செய்ததுதான் சரி என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. நாட்டின் வரலாற்றில் மாமன்னருக்கும் பிரதமருக்கும் இடையே இப்படியொரு முட்டல் மோதல் இருந்தது கிடையாது.
தம்முடைய அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கி பின்தள்ளும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் போக்கைக் கண்டு மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் – சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் – முஸ்தபா பில்லா ஷா ஆழ்ந்த வேதனையும் வருத்தமும் அடைந்துள்ளார்.
அவசரகாலச் சட்ட விதிமுறைகளை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை, மேலவை ஆகிய சபைகளில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்குப் பின்னர் தம்முடைய ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கும்படி 2021, ஜூலை 24ஆம் தேதி அகோங், சட்டம் , நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பு ஏற்றுள்ள பிரதமர் இலாகா அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் , அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண் ஆகிய இருவரையும் அரண்மனைக்கு வரவழைத்து அறிவுறுத்தி இருக்கிறார்.
ஆனால் இதற்கு இரு தினங்களுக்குப் பின்னர் ஜூலை 26ஆம் தேதி மக்களவை கூட்டத் தொடர் தொடங்கியபோது 2021 ஜனவரி 11ஆம் தேதி அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் இயற்றப்பட்ட அனைத்து ஆறு (6) அவசரகாலச் சட்ட விதிமுறைகளையும் 2021, ஜூலை 21ஆம் தேதியே (அதாவது மாமன்னர் சந்திப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்னரே) அரசாங்கம் ரத்து செய்து விட்டது என்று தக்கியுடன் அறிவித்தார்.
இதற்குப் பின்னர் நடந்தது எல்லாமே ஒரு வரலாறாகி விட்டது. மாமன்னர், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், நாடாளுமன்றம் ஆகிய தரப்புக்கு சவால் விடும் வகையில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் விடாப்பிடியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்விவகாரத்திற்கு நீதித் தராசுபோல் நடுநிலையாக இருந்து சரியான தீர்வு காண வேண்டிய மக்களவை சபாநாயகர் டத்தோ அஸஹார் அஸிஸான் ஹருண், அரசாங்கம் மக்கள் பக்கம் சாய்ந்து ஒரு தலைப்பட்சமாக நடப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 2021, ஜனவரி 11ஆம் தேதி மாட்சிமை தங்கிய மாமன்னர் பிரகடனம் செய்த அவசரகாலம் இன்று 2021, ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவோடு காலாவதியாகிறது. இதை வைத்துக் கொண்டு இந்த 7 மாதங்களாக விருப்பம் போல் செயல்பட்டு வந்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் தன்னிகரற்ற அதிகாரம் ஒரு முடிவுக்கு வருகிறது.
இதற்குப் பின்னர் அவசரகால உச்ச அதிகாரத்தைப் பெறும் மாமன்னர் நாட்டின் பிரதமரைப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? கண்டிப்பாக முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பிரதமரைப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தைப் பேரரசர் பெற்றிருப்பார். அதே சமயம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கருத்தறியும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
முஹிடினுக்கு இன்னமும் பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிர்ணயிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விரைந்து இஸ்தானா நெகாராவுக்கு தனித்தனியாக அழைத்து கருத்து கேட்கலாம்.
இதற்கு மாற்றாக மக்களவையில் முஹிடினுக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படலாம். இதற்கு சபாநாயகர் டத்தோ அஸஹார் அஸிஸான் முட்டுக்கட்டையாக இருப்பார் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.
நடப்பில் முஹிடின் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கான ஆதரவு 105 என்று கூறப்படுகிறது.
இருப்பினும் பெர்சத்து கட்சித் தலைவரான முஹிடினை பிரதமர் பதவியில் இருந்து வீழ்த்தியே தீர்வது என்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அம்னோ வசம் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதரவை வாபஸ் பெற்றால் கேள்விகள் இன்றி முஹிடின் ஆட்சி கவிழ்ந்து விடும்.
அப்படியே பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் முஹிடினுக்கு ஆதரவாக அரசாங்கத்தில் தொடர்ந்தாலும் எஞ்சியுள்ள 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து வெகு எளிதாக முஹிடினை அம்னோ கவிழ்த்து விடும்.
இந்நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதில் தோல்வி கண்டால் சிறுபான்மை கூட்டணி அரசாங்கமே அடுத்து பதவி ஏற்கும்!
–பி.ஆர். ராஜன்