பக்தர்களின்றி பேராலய பெருவிழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமரிசையாக நடக்கும் திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி வேளாங்கண்ணி மாதாவின் கொடியேற்றப்படவுள்ளது.
இதனால் பக்தர்கள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காவி உடை அணிந்து சைக்கிள், நடைப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மாதாவின் திருக்கொடி ஏற்றும் தினத்தன்று சாமி தரிசனம் செய்வர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வர தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனியும், செப்டம்பர் 8 ஆம் தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது