நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்!

அதிர்ச்சியில் மாணவர்கள்!

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமாக அளித்த பதிலில், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 24 பல்கலைக்கழகங்கள் போலி பல்கலைக்கழகங்கள் என பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர லக்னோவில் உள்ள பாரதிய சிக்‌ஷா பரிசாத், டெல்லியில் இருக்கும் ஐஐபிஎம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும், பல்கலை மானிய ஆணையத்தின் 1956 சட்டவிதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது .

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 8 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . டெல்லியில் 7 போலி பல்கலைக்கழகங்களும் , ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாநில தலைமை செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர்கள், முதன்மை செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here