பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் முழுமையான தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தளர்வுகளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி தய்யூப்கான் @ டத்தோ அலி மாஜு தெரிவித்தார்.
ஆனால் நாட்டில் இரண்டாம் கட்ட மீட்சியில் இருக்கும் சில மாநிலங்களுக்கு மட்டுமே இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கினால் மிகவும் வரவேற்கதக்க வகையில் இருக்கும். அதற்கு அரசாங்கம் தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும்.
2ஆம் கட்ட மீட்சியில் இருக்கும் மாநிலங்களை தவிர்த்து கோவிட் தொற்று குறைவாக இருக்கும் மாநிலங்களுக்கும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த ( உதாரணமாக புத்ராஜெயா) அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் தொற்று பரவாமல் இருக்க உணவகங்களின் முன் இருக்கும் திறந்த வெளி இடத்தில் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்க வேண்டும். அண்டை நாடான சிங்கப்பூரில் அது நடைமுறையில் இருப்பதை டத்தோ அலி மாஜு சுட்டிக் காட்டினார்.
மேலும் அரசாங்கம் உணவகங்களின் வாடகை 30 % விழுக்காட்டு கழிவினை வழங்குமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் பல கடை உரிமையாளர்கள் அதனை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். அரசாங்கம் அதனை சற்று கவனத்தில் கொண்டு வாடகையில் கழிவினை வழங்க வகை செய்ய வேண்டும்.
ஏறக்குறைய 17 மாதங்களாக கோவிட் தொற்றினால் வியாபாரத்தை இழந்து பல உணவக நடத்துனர்கள் பெரும் மன உளைச்சல் மற்றும் கடன் தொல்லையில் சிக்கி தவிக்கின்றனர். அதனால் அரசாங்கம் எங்களின் கோரிக்கைகளை கவனம் கொள்ள வேண்டும் என்று டத்தோ அலி மாஜு வேண்டுகோள் விடுத்தார்.