உணவு விநியோகிப்பாளர் வாரிசுதாரர்களுக்கு இரு திட்ட இழப்பீடுகளை வழங்கியது சொக்சோ

 

கிள்ளான், ஆக, 20-

கடந்த ஆகஸ்டு 11ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்த Grab Food உணவு விநியோகம் செய்யும் நபரின் வாரிசுதாரர்களுக்கு சொக்சோ­  (PERKESO) அமைப்பு  அதன் இழப்பீடுகளை  வழங்கியது.

முகமட் நஸிருல் மூபின் மாட் நஸிர் (வயது 21) எனும் அந்த நபர் உணவு விநியோகம் செய்ய பயணம் மேற்கொண்டிருந்தபோது லோரியுடன் மோதியுள்ளார்.

இந்த விபத்து ஷா ஆலமில் நிகழ்ந்தது. அதில் மார்பு, வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டதன் காரணமாக முகமட் நஸ்ருல் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கிள்ளானைச் சேர்ந்த முகமட் நஸிருல், முழு நேரமாக தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தன் பெற்றோர் மற்றும் படித்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகளுக்கு உதவும் வகையில் உணவு விநியோகம் செய்து கூடுதல் வருமானம் ஈட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் முழு நேரமாக தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அவர், 1969 தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் (உட்பிரிவு 4)இன் கீழ் சோக்சோ­  சந்தா செலுத்தி வந்துள்ளார்.

மேலும் SPS Lindung திட்டத்தின் வாயிலாக அவர் சொக்சோ­வின் சுய வேலை சமூகப் பாதுகாப்புத் திட்டத்திலும் சந்தா செலுத்தி வந்துள்ளார்.

இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி அவர் இந்த சுய வேலைக்கான சந்தாவைச் செலுத்தி வந்துள்ளார். குறிப்பாக Grab Food தள நிர்வாகத் தரப்பின் வாயிலாக அவர் இந்த சந்தா திட்டத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் முகமட் நஸிருலின் வாரிசுகள் இவ்விரண்டு திட்டங்கள் கீழ் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர். குறிப்பாக  ஏழு உடன்பிறப்புகளுள் 4ஆவதாக முகமட் நஸிருல் பிறந்துள்ளார். அவரின் தந்தை மாட் நஸிர் அபு ஹசான் கடை நிலை ஊழியராவார்.

அவரின் தாயார் நோர்லின் ஹசேன் இல்லத்தரசியாவார். பெற்றோர், உடன்பிறப்புகளான நூர் நடியா மாட் நஸிர் (வயது 18), நூர் நஸுஹா மாட் நஸிர் (வயது 12), ஹஸ்மா அப்துல்லா (வயது 10) Faedah Pencen Penakat dan Faedah Pengurusan Mayat (FPM)   ஆகிய சொக்சோ­வின் இரு இழப்பீடுகளைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இறுதிச் சடங்கிற்கான இழப்பீட்டு உதவித்தொகை 2 ஆயிரம் வெள்ளியை முகமட் நஸிருல் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சொக்சோ­ அமைப்பின் சுய வேலை சமூகப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் ஹாஜி ஹசார் முகமட் நட்ஸிரி, முகமட் நஸிருல் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கினார்.

அவருடன் சொக்சோ அமைப்பின் தகவல் பிரிவு தலைமை அதிகாரி ஈஸாட் ஹாஜிராயா, பிரிஹாத்தின் – சனைர்ஜி குழு கிளைப் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹபி ஹஷிம், கிள்ளான் சொக்சோ­ அலுவலக நிர்வாகி மோகனதாஸ் வீரையா ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

SPS Lindung திட்டமானது சொக்சோ­ அமைப்பின் சுய வேலை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் 232.80 வெள்ளி மதிப்பிலான இரண்டாம் பிரிவு சந்தா திட்டமாகும். இது 2021 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் 100 விழுக்காடு தொகை திட்டமாகும்.

சுய வேலை செய்து வருபவர்களுக்கு தொழில் ரீதியிலான நோய்கள் மற்றும் பணி நேரத்தில் ஏற்படும் விபத்துகள் போன்ற பேரிடர்களில் இருந்து இத்திட்டம், ஓராண்டு கால அவகாசத்திற்குப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தருகின்றது.

சுய வேலை செய்பவர்கள் பணி நேரத்தில் மரணமுற்றால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு Fot ரொக்கத் தொகையிலான இழப்பீடுகளை வழங்குவதற்கு இத்திட்டம் வழிவகுக்கின்றது.

இது மட்டுமன்றி வேலை செய்யும்போது அத்தரப்பினர் விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்குவது மட்டுமன்றி உடற்கூறு மீட்சி நடவடிக்கைகள், தொழில்திறன் பயிற்சிகளும் இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

Pencen Penakat  திட்டமானது சட்டப்பிரிவு 4இன்  அடிப்படையில் வழங்கப்படும் உடல் ஊன இழப்பீடாகும். குறிப்பாக சொக்சோ­ சந்தாதாரர்கள் தங்களின் தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களால் மரணமடைந்தால் அவர்களின் தகுதிபெற்ற வாரிசுகளுக்கு இந்த இழப்பீடுகள் வழங்கப்படும்.

குறிப்பாக 60 வயதுக்குள் மரணம் எய்வது மற்றும் சந்தா தகுதி விதிமுறைகளைப் பூர்த்தி செய்வது இந்த  Pencen Penakat திட்டத்தின் விதிகளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here