கோல திரெங்கானு: பூலாவ் கம்பேங்கில் உள்ள அவரது வீட்டின் கழிவறையில் 60 வயதுடைய ஒருவரின் உயிரற்ற உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கோல திரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரோஜிசா அப்னி ஹஜார் இச்சம்பவம் பற்றி கூறுகையில், இன்று (ஆகஸ்டு 23) காலை 11.31 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு படையினர், அவரது வீட்டில் உள் நுழைவதற்காக வீட்டின் கதவை உடைக்க வேண்டியிருந்தது என்றும் கூறினார்.
பல நாட்களாக பாதிக்கப்பட்டவர் தனது வீட்டை விட்டு வெளியே வராததை கவனித்த அக்கம் பக்கத்தினர், ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்ததாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் அயல் வீட்டார் இன்று காலை அவர் காணாமல் போனது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரிலேயே சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் சென்றதாக அவர் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் சுகாதார அமைச்சின் ஊழியர்களால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், உடலின் நிலையின் அடிப்படையில், அவர் மூன்று நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
மேலும் சடலத்தை காவல்துறையிடம் ஒப்படைக்கும் முன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முழு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து இறந்தவரின் உடலை அகற்றினர் என்று ரோஜிசா கூறினார்.
– பெர்னாமா