வியாபாரம் தொடங்க அனுமதி – வேலையாட்கள் இல்லாமல் அவதி; மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் வேதனை

கோவிட் தொற்றின் காரணமாக பல மாதங்களாக வியாபாரம் இல்லாமல் இருந்து வந்தோம். அரசாங்கம் தற்பொழுது உணவக வியாபாரத்தை தொடங்க அனுமதி வழங்கியிருக்கின்றனர். வியாபாரத்தை தொடங்கி விட்டோம். ஆனால் வேலையாட்கள்  இல்லாமல் அவதியுறுகிறோம் என்று மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யூப்கான் @  டத்தோ அலி மாஜு தெரிவித்தார்.

கோவிட் தொற்றின் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலர் நாட்டிற்கு திரும்பி சென்று விட்டனர். எங்களின் நிலையை அரசாங்கம் கவனத்தில் கொண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிக்க எங்களுக்கு ஆவண செய்ய வேண்டும். வியாபாரம் இல்லாத நாட்களை விட வியாபாரம் இருந்தும் அதை நடத்த முடியாதது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று கூறினார்.

நாடாளவிய நிலையில் பல உணவக உரிமையாளர்கள் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். பினாங்கு, தெலுக் கும்பார் நாசி காண்டார் ஹெரிடேஜ் உணவக உரிமையாளர் ஹாஜி அபிப் ரஹ்மான்,  மாஜு அஹமட் உணவக உரிமையாளர் பஷீர் அகமது ஆகியோர் கூறுகையில் நாங்கள் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க காத்திருக்கிறோம். ஆனால் வேலைக்கு வர அவர்கள் தயாராக இல்லாத நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்.

வங்சா மாஜு BRJ உணவக உரிமையாளர் ஹாஜி ஜைனி, புக்கிட் பெருந்தோங் சலாம் செந்தோசா உணவக உரிமையாளர் அப்துல் முக்தாதிர், ஷாஆலம் ஹல் அவால் உணவக உரிமையாளர் அமீர் டீன், ஜாலான் அம்பாங் செலாரா அம்பாங் உணவக உரிமையாளர் முகமட் அஸ்ரின் பின் அன்வார்  அலி ஆகியோர் கூறுகையில் உணவகத்தில் சமைக்க ஆண் பணியாளர்கள் அவசியம் தேவை. மலேசிய ஆண்கள் யாருமே வேலைக்கு மாட்டார்கள். ஏனெனில் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு  சுவையான உணவு வழங்கினால் மட்டுமே அவர்கள் மீண்டும் கடைக்கு வருவார்கள். எங்களின் நிலை இதே போல் நீட்டித்தால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் என்றார்.

செராஸ் நாசி கண்டார் கேட்பன் உரிமையாளர் முகமட் அஸ்மி, நெகிரி செம்பிலான் நஸாருடின், மஸ்ஜிட் இந்தியா அல்-பிடாயா உணவக உரிமையாளர் முகமட் நாசர் பின் முகமட் இஷா ஆகியோர் கூறுகையில் உணவகம் சுத்தமாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் வருகைப் புரிவர். ஆனால் உணவகத்தில் தட்டுகள் மற்றும் பாத்திரங்களை கழுவவும் சுத்தம் செய்வதும்  மலேசியர்கள் பணிக்கு வர விரும்புவதில்லை.

நாங்கள் அனைத்து சலுகைகளும் வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் வேலைக்கு வர மறுப்பவர்களை நாங்கள் என்ன செய்ய முடியும். மலேசியர்கள் சில துறைகளுக்கு பணிக்கு வர மாட்டார்கள் என்பது அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் வரை அறிவார்கள். நாங்கள் நாட்டிற்கு வருவாயை ஈட்டி தருகிறோம். ஆனால் அரசாங்கம் எங்களின் நிலையை புரிந்து கொள்ளாதது மிகவும் வேதனை அளிக்கிறது.

உணவக உரிமையாளர்களான எங்களின் கோரிக்கை அரசாங்கம் நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அதிக கவனம் செலுத்தி உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் அனைவரின் கோரிக்கையாகும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here