ரஷ்யாவில் 4 மாதங்களில் 3ஆவது விமான விபத்து.. 16 பேர் பலி, பலர் படுகாயம்… என்ன காரணம்

மாஸ்கோ: மத்திய ரஷ்யா பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் 6 பேர் மீட்கப்பட்டனர்.மத்திய ரஷ்யாவின் டாடர்ஸ்டான் குடியரசின் மெண்செலின்ஸ்க் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த L-410 விமானம் நேற்று விபத்திற்குள்ளானது.

ரஷ்யாவில் பாராசூட் சாகச வீரர்களை ஏற்றிச் சென்ற L-410 விமானம் இன்று காலை 9.23 மணிக்கு மெண்செலின்ஸ்க் என்ற பகுதியில் திடீரென விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை ரஷ்ய அரசு உறுதி செய்துள்ளது. மேலும், விபத்திற்குள்ளான விமானம் குறித்த புகைப்படங்களையும் ரஷ்ய அரசு வெளியிட்டுள்ளது.இந்த விபத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானத்தில் டாடர்ஸ்தான் மாகாண தலைவர் ருஸ்தம் மின்னிகனோவ்வும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது நிலை குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்த விபத்தில் 2 இன்ஜின் கொண்ட L-410 ரக விமானம் பலத்த சேதமடைந்து, இரண்டு பாதியாக உடைந்துள்ளது.1987ஆம் ஆண்டு முதல் இந்த விமானம் பயன்பாட்டில் உள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்துத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த விபத்திற்கு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷியாவின் அவசர சேவைகள் குழு இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

ரஷ்யாவில் கடந்த 4 மாதங்களில் நடைபெறும் 3ஆவது விபத்து இதுவாகும். கிழக்கு ரஷ்யாவில் கடந்த மாதம் ஏற்பட்ட விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதேபோல கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட விமான விபத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். கடந்த காலங்களில் ரஷ்யாவில் அடிக்கடி மிக மோசமான விமான விபத்துகள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.

அதன் பிறகு அந்நாட்டு அரசு எடுத்து தீவிர முயற்சிகளால் விமான விபத்துகள் குறைந்தன. இருந்தாலும் கூட, மோசமான பராமரிப்பு பணி, முறையான விதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரஷ்யாவில் அடிக்கடி விமான விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here