பங்ளாதேஷில் நடந்த சமய வன்முறையில் 6 பேர் பலி ; 450 பேர் கைது

டாக்கா: பங்ளாதேஷ் நாட்டில் கடந்த சில நாட்களாக இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டதாகவும் 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இந்துக்களின் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன; வீடுகள் சூறையாடப்பட்டன, மற்றும் தீக்கிரையாக்கப்பட்டன.

துர்க்கா பூசையின்போது இடம்பெற்ற இந்த வன்முறை நிகழ்வுகள் தொடர்பில் 71 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்ளாதேஷ் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்து விழுக்காட்டினர் இந்துக்கள். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 2009ல் ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிகழ்ந்த ஆகப் பெரிய சமய வன்முறை இது.

இந்நிலையில், “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்புணர்வால் பங்ளாதேஷ் இந்துக்கள்மீது தொடுக்கப்பட்ட அண்மைய தாக்குதல்கள், அரசியலமைப்பிற்கு எதிரானது. அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று பங்ளாதேஷிற்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் மியா செப்போ வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சமயத்தை முன்வைத்து வன்முறையைத் தூண்டிவிட்டோர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் ஷேக் ஹசினா, உள்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், உண்மையை ஆராயாமல் சமூக ஊடகங்களில் வரும் எதனையும் நம்பிவிட வேண்டாம் என்று பொதுமக்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here