சுங்கைப் பட்டாணி அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) 94ஆவது கிலோமீட்டரில், பழுதடைந்ததால் அவசரப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த பெரோடுவா மைவி வாகனம், பின்னால் வந்த லோரியால் மோதப்பட்டு, பின்னர் முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. காலை சுமார் 9 மணியளவில் நடந்த இந்த விபத்தில், ஒரு பெரோடுவா மைவி, ஒரு டொயோட்டா நோவா மற்றும் ஒரு லோரி ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாகவும், இதில் மொத்தம் எட்டு பேர் பாதிக்கப்பட்டதாகவும் கோல மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ராம்லான் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பழுதடைந்த பெரோடுவா மைவிக்கு முன்னால் டொயோட்டா நோவா நின்றிருந்ததாகவும், பின்னர் பின்னால் வந்த லோரி மைவியின் பின்புறத்தில் மோதியதாகவும் தெரியவந்துள்ளது. இந்த மோதலால், மைவி வாகனமும் டொயோட்டா நோவாவின் பின்புறத்தில் மோதியது. இந்த மோதலின் விளைவாக, மூன்று வாகனங்களும் சாலையின் ஓரமாகச் சறுக்கிச் சென்றன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பெரோடுவா மைவி காரின் ஓட்டுநருமான 56 வயதான நோரியா மாட் இசா படுகாயம் அடைந்த நிலையில் மற்றவர்கள் லேசான காயங்களுடன் தப்பியதாகவும், இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (APJ) பிரிவு 43-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹன்யான் கூறினார்.








