வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் SOP களை தெளிவுபடுத்துங்கள்; முதலாளிகள் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 27:

நாட்டில் அரசினால் அனுமதிக்கப்பட்ட அனைத்துத் துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சேர்ப்பதற்கான SOPகள் குறித்து முதலாளிகளுக்கு அரசாங்கம் கூடுதல் தெளிவை வழங்க வேண்டும் என்று தொழில் தருநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் (MEF) தலைவர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் அவர்கள் இது பற்றிக் கூறிய போது, வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வருவதில் உள்ள செலவு குறித்து தாம் கவலையடைவதாக கூறினார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து செலவுகளையும் முதலாளிகள் ஏற்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அத்தோடு “இந்த விஷயத்தில் சில தெளிவுகள் இருக்க வேண்டும், ஏனெனில் ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது ஏற்படும் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து செலவுகளுக்கும் முதலாளிகள் பணம் செலுத்த வேண்டும் என்பது நியாயமற்றது.

வெளிநாட்டு தொழிலாளர்களை நிர்வகிப்பதற்கான சமீபத்திய SOPகள் உள்துறை மற்றும் மனித வள அமைச்சகங்களால் வழங்கப்பட்டன. இந்த கோவிட் -19 தொற்று நோய்க் காலகட்டத்தில் வணிகம் செய்வதற்கான செலவு அதிகரிப்பானது , மலேசியாவின் தொற்று நோய் மீட்பு முயற்சிகளை தடம் புரளச் செய்யும் என்றார் சையத் ஹுசைன்.

“உதாரணமாக, ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி அவரது சொந்த நாட்டிற்கு புறப்படுவதற்கு முன் தனது அனைத்து ஆவணங்களையும் இழந்தால், அவர்களின் ஆவண மாற்றீட்டுச் செலவுகளுக்கு முதலாளி இன்னும் பொறுப்பாவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒரு நேர்காணலுக்கான ஆவணங்களைத் தயாரிப்பதில் வெளிநாட்டுத் தொழிலாளிக்கு ஏற்படும் செலவுக்கு முதலாளிகள் பொறுப்பேற்கலாமா என்றும் சையத் ஹுசைன் கேள்வி எழுப்பினார்.

“முதலாளி, தொழிலாளி மற்றும் அரசாங்கத்திற்கு இடையே எந்தவிதமான தவறான புரிதல் மற்றும் தகராறுகளைத் தவிர்க்க தெளிவான கொள்கையை வைத்திருப்பது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

ஆதார நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் தங்கள் குடிமக்கள் மற்ற நாடுகளில் பணிபுரிய செல்வதை எளிதாக்க வேண்டும் என்றும் மூன்றாம் தரப்பு ஆட்சேர்ப்பு முகவர்கள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் சையத் ஹுசைன் கூறினார்.

இந்த ஆதார நாடுகள் ஆட்சேர்ப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகையில் அதிக வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றார். நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் குறித்து மூல நாடுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பங்கை ஆற்றலாம் என்றார்.

ஏற்கனவே நாட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்காக குடிவரவுத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் , நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலரிடம் சரிபார்ப்புக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் இல்லாததால் இங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது என்று சையத் ஹுசைன் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு பதிவு செய்த 212,926 சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களில் 34,318 விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். மேலும் 20,889 பேர் நிராகரிக்கப்பட்டனர் மற்றும் 157,719 பேர் சரிபார்ப்பு செயல்முறைக்கு குடிநுழைவுத்துறை அலுவலகத்திற்கு வரவில்லை என்றார்.

“இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களில் அதிகமானவர்களை மறுசீரமைப்பு திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒருவேளை குடிவரவுத் துறை சரிபார்ப்புக்கான ஆவணங்களின் தேவைகளைக் குறைக்க வேண்டும்.

“மேலும் இந்த சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களை சட்டப்பூர்வமாக்க முடியாவிட்டால், அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். இதன்மூலம், சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மிகவும் திறம்பட தீர்வு காண முடியும்,” என்றார்.

-எஃப்.எம்.டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here