தீபாவளியை முன்னிட்டு மகாத்மா காந்தியை கெளரவிக்கும் முகமாக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரிட்டன்

பிரிட்டனில் மகாத்மா காந்தியை கெளரவிக்கும் முகமாக சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களாலும் கடந்த வியாழக்கிழமை ( நவம்பர் 5) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், மகாத்மா காந்தியை கெளரவிக்கும் முகமாக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரிட்டன் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக் தீபாவளியை முன்னிட்டு அதனை வெளியிட்டார்.

அதற்கான மாதிரி நாணயத்தையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஹிந்து மதத்தை சேர்ந்த நான், தீபாவளியன்று இந்த நாணயத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முக்கிய காரணமாக விளங்கிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிரிட்டனில் நாணயம் வெளியிடப்படுவது மிகவும் அற்புதமாகும்” என அவர் கூறினார்.

இந்த நாணயத்தில், இந்தியாவின் தேசிய மலரான தாமரையும், மகாத்மா காந்தியின் பொன்மொழி ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடிய ஒருவருக்காக, பிரிட்டனில் நினைவு நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும். ‘தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட உள்ள இந்த நாணயம் நேற்று முதல் விற்பனைக்கு விடப்படப்பட்டிருக்கிறது’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here