ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவு பொருட்கள் உண்ணுவதற்கு ஏற்றவையா? கால அளவு என்ன?

எல்லா உணவுகளும் ஒரே மாதிரி இல்லை. அதே போல, ஒவ்வொரு உணவும் குறிப்பிட்ட கால அளவு வரை உட்கொள்ளும் தன்மையோடு, கெடாமல் இருக்கும்.

அதிவேகமாக சுழலும் தற்போதைய காலகட்டத்தில், நம்முடைய நேரத்தை சரியாக நிர்வகிப்பது மிகவும் கடினமானது. பரபரப்பான வாழ்க்கை முறையில், வீட்டுப் பணி மற்றும் அலுவலகப்பணிக்கு இடையே, சில நேரங்களில் சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் போகிறது. நீங்கள் வேலைக்கு செல்பவராக, அதுவும் தனியாக நீங்களே சமைத்து சாப்பிடும் நிலையில் இருக்கும் போது, இது உண்மையாகவே கடினமாக உணர வைக்கிறது.

அனைத்து வேலைகளையும் சரியாக நிர்வகிக்க, கொஞ்சம் கூடுதலாய் நேரம் கிடைக்கும் போது சமைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது பழக்கமாகி விட்டது. இதனால், ஒவ்வொரு முறையும் சமைக்க செலவிடும் நேரம் மிச்சமாகும். அது மட்டுமின்றி, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து உணவை எடுத்து சூடு படுத்திச் சாப்பிடுவதும் எளிமையானது. இருப்பினும், இந்த வாழ்க்கை முறை, நம் உடல்நலம் பற்றிய மிகப்பெரிய கேள்வியை முன்வைக்கிறது.

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவு பொருட்கள் உண்ணுவதற்கு ஏற்றவையா? குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் உணவுகள் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு முன்பு அவற்றை உட்கொள்வதற்கான கால அவகாசம் இருக்கின்றதா? அப்படி உண்பதற்கு ஏற்றதாக இருக்கும் பட்சத்தில், எவ்வளவு காலத்துக்குள் அவற்றை உண்ணலாம்.

குளிரூட்டப்பட்ட உணவை உட்கொள்வதால் ஏதேனும் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படுமா? இது போன்ற சந்தேகங்கள் உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதற்கான சரியான நேரத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

எல்லா உணவுகளும் ஒரே மாதிரி இல்லை. அதே போல, ஒவ்வொரு உணவும் குறிப்பிட்ட கால அளவு வரை உட்கொள்ளும் தன்மையோடு, கெடாமல் இருக்கும். அதே போல தான் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவுகளும். ஒவ்வொரு உணவும் கெடாமல் இருக்க ஒரு கால அளவு இருக்கிறது.

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சாதம் (சமைத்த அரிசியை) இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். நீங்கள் மீண்டும் சூடு படுத்தும் முன்பு, அறையின் வெப்பநிலையில் சில நிமிடங்கள் வெளியே வைக்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட வேகவைத்த பருப்பை இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். வேகவைத்த பருப்பை நீண்ட நாட்கள் கழித்து சாப்பிடுவது வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தலாம்.

வெட்டப்பட்ட பழங்களை குளிர்சாதன பெட்டிகளில் நீண்ட நேரம் வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும், மேலும் காற்று புகாத பெட்டியில் (ஏர்-டைட் கன்டைனர்) வைக்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் வெட்டப்பட்ட பப்பாளியை வைத்தால், ஆறு மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். வெட்டி வைத்த ஆப்பிள் துண்டுகளை நான்கு மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். மற்றொன்று, வெட்டப்பட்ட ஆப்பிள் ஆக்ஸிஜனேற்றம் காரணமாக நிறம் மாறும்.

இவை தவிர, செர்ரிகளை ஏழு நாட்கள் வைக்கலாம். ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி ஆகிய பெர்ரி வகைகளை மூன்று முதல் ஆறு வாரங்கள் வரையும், சிட்ரஸ் பழங்களை ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரையும், திராட்சையை ஒரு வாரம் வரையிலும் வைக்கலாம்.

வெட்டப்படாத முழு முலாம்பழத்தை இரண்டு வாரங்கள் வைக்கலாம். வெட்டினால், அவை இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அன்னாசிப்பழங்களை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். பீன்ஸ் நான்கு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.

இரண்டு நாட்களுக்கு மேல் சோளம், ஏழு நாட்களுக்கு மேலாக கத்திரிக்காய், ஒரு வாரத்துக்கு மேல் காளான் ஆகியவற்றை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here