போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது

கோத்தாகினபாலு, நவம்பர் 24 :

நேற்று, போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில், ஒரு தம்பதியினர் உட்பட மூன்று நபர்களை, இரண்டு வெவ்வேறு சோதனைகளில் போலீசார் கைது செய்துள்ளனர் .

கோத்தாகினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் (IPD) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையில், சுமார் 2.5 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கோத்தாகினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைதி அப்துல்லா தெரிவித்தார்.

இங்குள்ள தாமான் சூரியா கோபுசாக் என்ற இடத்தில் இரவு 7.30 மணியளவில் முதல் சோதனை நடத்தப்பட்டு, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,711 கிராம் கஞ்சா வகை போதைப்பொருளுடன் 20 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், “கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் போதைப்பொருள் பொதி செய்யப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

KK Times Squareஇல் நேற்று இரவு 11.35 மணியளவில் இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு 21 மற்றும் 22 வயதுடைய தம்பதியினரை போலீசார் கைது செய்ததாகவும் முகமட் ஜைதி கூறினார்.

872.16 கிராம் எடையுள்ள கஞ்சாக் கட்டிகளை நடவடிக்கைக் குழு கண்டுபிடித்ததாகவும், சந்தேக நபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனை சோதனையில் நேர்மறையான பதிலை பெற்றனர் என்றும் அவர் கூறினார்.

“அனைத்து கஞ்சா போதைப்பொருட்கள் நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர், மலேசிய தீபகற்பத்தில் இருந்து கூரியர் சேவைகள் மூலம் பெறப்பட்டது,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் அனைவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் முகமட் ஜைதி கூறினார்

“இரண்டு வழக்குகளும் 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகின்றன, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை வழங்க வழிசெய்யும்.

மேலும் சந்தேகநபர்கள் மூவரும் இன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here