மெக்சிக்கோவில் நடந்த சாலை விபத்தில் குறைந்தது 49 புலம்பெயர்ந்தோர் பலி !

மெக்சிக்கோ, டிசம்பர் 10 :

மெக்சிக்கோவில் வியாழக்கிழமை நடந்தசாலை விபத்தில் குறைந்தது 49 புலம்பெயர்ந்தோர் பலியாகினர். 58 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 21 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சியாபஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ தெரிவித்துள்ளார்.

மத்திய அமெரிக்க குடியேற்றவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பயணித்த கனரக வாகனம் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி தெற்கு மாநிலமான சியாபாஸில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது.

மெக்சிக்கோவின் சியாபாஸ் அமெரிக்காவை அடைய முயற்சிக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் முக்கிய போக்குவரத்து புள்ளியாகும்.

சியாபாஸ் டி கோர்சோ நகரையும் டக்ஸ்ட்லா குட்டிரெஸ் மாநிலத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் பயணித்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தபோது, இவ்விபத்து ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டுநர் வேகமாகச் சென்றதாக ஆரம்ப விசாரணையில் தெரியவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

மாநில ஆளுநர் ருட்டிலியோ எஸ்கண்டோன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். “காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவியைப் பெற நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்,” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விபத்துக்கு யார் பொறுப்பு என்பதை சட்ட அமலாக்கத்துறை தீர்மானிக்கும்,” என்றார்.

–AFP

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here