வெ.116,000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்; நால்வர் கைது

பாசீர் மாஸ், டிசம்பர் 16 :

நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், போதைப்பொருள் வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன், 1 கிலோவுக்கும் அதிகமான சியாபு மற்றும் சுமார் 116,000 வெள்ளி மதிப்புள்ள 8,000 மெத்தப்பேட்டமைன் வகை போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் 7,925 வெள்ளி ரொக்கம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது என்று பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறையின் தலைமைதுணை ஆணையர் முகமட் நசாருடின் முகமட் சைட் கூறினார்.

முதல் நடவடிக்கையில், இங்குள்ள தாமான் ரந்தாவ் மாஸில் 30 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை போலீசார் தடுத்து வைத்தனர்.

“ஒரு போலீஸ் குழு நேற்று மாலை 5.45 மணியளவில் தாமான் ரந்தாவ் மாஸில் சந்தேகமான முறையில் நடந்துகொண்ட ஆடவரைக் கண்டது, அவர் எங்கள் அதிகாரிகளைப் பார்த்ததும் தப்பிக்க முயன்றார்.

“ஆனால் போலீசார் அவரை கைது செய்தனர், பின்னர் அவரை சோதனையிட்டதில், அவரது பையில் சியாபு மற்றும் மெத்தப்பேட்டமைன் மாத்திரைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உள்ளூர்வாசியான சந்தேகநபர், போதைப் பொருள்களை அனுப்பும் ஃபாரிஸ் எனப்படும் போதைப்பொருள் விநியோகிப்பவரால் பணியமர்த்தப்பட்டதாக போலீசாரிடம்
ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

“போதைப்பொருளை கொண்டுசெல்லும் வேலைக்கான ஒரு பயணத்திற்கு அவருக்கு சுமார் RM300 வழங்கப்பட்டது. அந்த சந்தேக நபரிடம் இருந்து பணத்தையும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் இன்று அதிகாலை மேற்கொண்ட தொடர் நடவடிக்கையில், ரந்தாவ் பஞ்சாங்கிற்கு அருகிலுள்ள கம்போங் பாங்கோல் கூலிமில் உள்ள ஒரு கடையில் மூன்று ஆண்களை போலீசார் தடுத்து வைத்ததாக முகமட் நசாருடின் கூறினார்.

“25 முதல் 30 வயதுடைய மூவரிடமிருந்தும் ஒரு சிறிய அளவு போதைமாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூவரில் ஃபாரிஸ் என்பவரும் அடங்குவார்,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலதிக விசாரணைகளுக்காக நான்கு பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here