புறநகரில் தங்குங்கள் 50% கழிவை பெறுங்கள்!

சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு (MOTAC) அதன் ஏஜென்சியான Tourism Malaysia (மலேசியா சுற்றுலாத்துறை) வழி ஜோம் ஹோம்ஸ்தே (jomhomestay.my) அகப்பக்கத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 2021 டிசம்பர் 31 வரை நாடு முழுமையிலுமுள்ள புறநகர்ப் பகுதிகளில் தங்கி விடுமுறையைக் கழிப்போருக்கு 50 விழுக்காடு வரை கழிவை இது வழங்கும்.

கம்போங் ஸ்தே, ஹோம்ஸ்தே மலேசியா சங்கத்தின் ஒத்துழைப்பில் உருவாகியிருக்கும் இந்தப் பிரச்சார இயக்கத்தை சுற்றுலா, கலை, கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜா நான்சி ஷுக்ரி, சரவாக், கூச்சிங்கில் அண்மையில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார். உள்நாட்டுச் சுற்றுலாத்துறைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் பொருளாதார மீட்சித் திட்டம் 1.0 கீழ் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

புறநகரில் தங்குவதற்குரிய அனைத்து தகவல்களும் இந்த jomhomestay.my போர்ட்டலில் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நடத்துநர்களும் அமைச்சில் பதிவுபெற்றுள்ளனர். மலேசியக் குடும்பத்தினர் அனைவரும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டின் சுற்றுலா வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்பது அமைச்சின் தலையாய நோக்கமாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் நிறைவான சுற்றுலா அனுபவத்தை மலேசியர்கள் பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி வலியுறுத்தினார்.

கோவிட்-19 கொடுந்தொற்றுப் பரவலால் நாட்டின் சுற்றுலாத்துறை படுமோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தத் தொழில்துறைக்குப் புத்துயிர் அளித்து உள்நாட்டுச் சுற்றுலாத்துறையில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதற்காக அமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இன்றளவில் 150 பேக்கேஜ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன, 60 நடத்துநர்கள் நாடு முழுமையிலும் பங்கேற்றிருக்கின்றனர். ஒருவருக்குத் தலா 80 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது.

jomhomestay.my போர்ட்டல் வழி முன்பதிவுசெய்யும் மலேசியர்கள் 50 விழுக்காடு வரை கழிவைப் பெறுவர். 2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

சுற்றுலா கலை, கலாச்சார அமைச்சு அமல்படுத்தியிருக்கும் இத்திட்டத்தின் கீழ் நாடு முழுமையிலும் இருந்து 3,397 பங்கேற்பாளர்கள் பதிவுசெய்துகொண்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 333 கிராமங்களில் தங்கி சுற்றுலாவைக் கழிக்க இவர்கள் ஆர்வமாக உள்ளனர். புறநகர் ஹோம்ஸ்தே பகுதிகள் 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. பெரும் செலவில் அல்லாது மிகவும் குறைந்த செலவில் இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல்கள் ரம்மியமான அனுபவத்தைப் பொதுமக்களுக்கு வழங்கும். சுற்றி இருக்கக்கூடிய வசதிகளைச் சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கலாம்.

2021இல் அக்டோபர் 31ஆம் தேதி வரை இத்திட்டமானது நாடு முழுமையிலும் 2.245 மில்லியன் ரிங்கிட்டை வருமானமாக ஈட்டித்தந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. அந்த ஆண்டில் அதே காலகட்டத்தில் இதன்மூலம் பெறப்பட்ட வருமானம் 24.69 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

2021 அக்டோபர் 11ஆம் தேதி முதல் மாநில எல்லைகளைக் கடந்து பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு இத்துறை மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் 870,236 ரிங்கிட் ஆகும். செப்டம்பர் மாதத்தில் அதன் வருமானம் 484,056 ரிங்கிட்டாக இருந்தது.

சுற்றுப்பயணிகளைப் பொறுத்தவரை அக்டோபரில் 6,946 பேரும் செப்டம்பரில் 2,737 பேரும் இப்பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றிருப்பது பதிவாகியிருக்கிறது. இந்தத் தரவுகளானது உள்நாட்டுச் சுற்றுலாத்துறை மலேசிய மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

இந்த ஹோம்ஸ்தே சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்துவதற்கு சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சு பல்வேறு திட்டங்களையும் விளம்பர நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கிறது. அதேபோல் இத்துறையில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறது என்று டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

உள்நாட்டுச் சுற்றுலாத் தேவைகளுக்கு ஏற்ப அத்துறைக்கு உருமாற்றம் செய்வதற்குரிய அனைத்து ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. புத்தாக்கம் நிறைந்த செலுத்தப்படும் பணத்திற்கு அர்த்தம் தர ஒரு முற்றிலும் மாறுபட்ட அதேசமயம் மனத்திற்கு இதமான சூழ்நிலையை இந்த ஹோம்ஸ்தே அனுபவம் தந்திட வேண்டும் என்பதில் அமைச்சு அதீத அக்கறை கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புறநகர்ப் பகுதிகளில் தங்கி விடுமுறையைக் கழிப்பவர்கள் இயற்கைச் சூழலை நிறைவாக அனுபவிக்க முடியும். அதேபோல் கடற்கரையை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் கண்களுக்கு ரம்மியமான சூழலையும் அனுபவித்து மனநிறைவு பெறலாம் என்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தங்குமிடத்திற்கு வெளியே பிபிகியூ போன்று சிறு அளவிலான விருந்துபசரிப்புகளை நடத்தி, மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்கக்கூடிய சூழ்நிலையை ஹோம்ஸ்தே வழங்குகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஹோம்ஸ்தேயில் தங்குவதற்கு வரும்போது பதிவுசெய்து அங்கிருந்து வெளியேறும் வரை அங்கு பணியில் இருப்பவரிடம் மட்டுமே எல்லா நேரத்திலும் நேரடிச் சேவைகளைப் பெறுவதற்குரிய வசதியையும் இந்த ஹோம்ஸ்தே வழங்குகிறது.

பிரச்சினைகள் ஏதும் இருப்பின் உடனுக்குடன் தீர்வு காணக்கூடிய வசதிகளும் அங்குள்ளன. இந்தச் சுற்றுலாத்துறைக்கான விளம்பர நடவடிக்கைகள் 2021, டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதற்குள்ளாகப் பதிவுசெய்துகொள்பவர்கள் 2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த பேக்கேஜ் செல்லுபடியாகும் என்றும் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

மேலதிகத் தகவல்களுக்கு: www. jomhomestay.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here