மனிதவள அமைச்சின் மலேசியக் குடும்பம் 100 நாள் அடைவு நிலை

SCOPE தந்த நல்வாழ்வு

HRD Corp, 1,000 முன்னாள் கைதிகளுக்கு 2021இல் SCOPE எனும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் திறன்பயிற்சி – வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

SCOPE என்பதன் அர்த்தம் மக்கள் சிறப்படைவதற்கு இரண்டாவது வாய்ப்பு, சந்தர்ப்பம் அளிப்பது. மலேசிய சிறைச்சாலை இலாகாவுடன் இணைந்து HRD Corp இந்த உன்னதத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நடப்பு மேலும் முன்னாள் கைதிகள் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருமானம் ஈட்டுவதற்கு ஓர் உந்துசக்தியாக இத்திட்டம் அமைந்துள்ளது.

திறன் பயிற்சிகளை வழங்கி வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்து அவர்களைப் பணியில் அமர்த்துவதுதான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

விவசாயம், தயாரிப்பு, நிர்மாணிப்பு, போக்குவரத்து, சேவைகள், சுரங்கம் – குவாரி, தோட்டம் ஆகிய துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது.

முதல்கட்ட முன்னோடித் திட்டத்தில் 100 நாட்களில் 1,000 பேர் பயிற்சிபெற்றனர். 20 தனியார் துறையினர் பங்கேற்ற இத்திட்டத்தில் 14 திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அவற்றில் தொழில்நுட்பத் திறன்கள், சுயமேம்பாடு, வேலை வாய்ப்பு – கல்வி உதவிகள், வாழ்க்கைப் பாடம் – மனநல ஆலோசனைகள், குடும்பம், கூட்டு சமுதாய ஆதரவு ஆகியவை அடங்கும்.

இரண்டாவது கட்டத்தில் (2022) 5,000 பேருக்கும் மூன்றாவது கட்டத்தில் (2023) 15,000 பேருக்கும் பயிற்சி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் கைதிகள் பேசுகிறார்கள் ; புதிய நம்பிக்கையோடு புது வாழ்க்கை

லாவ் வெங் செங் – வயது 36.
முதல் தடவை 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றேன். இரண்டாவது முறை 10 மாதங்கள் சிறை தண்டனை பெற்றேன். SCOPE திட்டத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சிறைச்சாலைக்கு வந்த அதிகாரிகள் என்னைத் தேர்வு செய்தனர்.

இங்கு வந்தேன். மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்குகிறது. பயிற்சி கொடுக்கப்பட்டது. வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. எனது வாழ்க்கையில் இது ஒரு பொன்னான தருணம்.

எதிர்காலம் பற்றிய கவலை இனியும் இல்லை. நிறைய சிந்தித்து சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை.

SCOPE எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்திருக்கிறது. இனி என் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். SCOPE திட்டத்திற்கு நன்றி.

HRD Corp நிறுவனத்திற்கு நன்றி, நன்றி, நன்றி!

ரஹிம் ஜலார் – 50 வயது. பிரம்மச்சாரி.
மலாக்காவில் வசிக்கிறேன். 20 முறை சிறைவாசம் அனுபவித்துள்ளேன். நான் நினைத்துப் பார்க்காத வாழ்க்கையை இன்று பெற்றிருக்கிறேன். பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன்.

எல்லா இடங்களிலும் எனக்கு எதுவுமே நிரந்தரமில்லாமல் இருந்தது. அடிக்கடி வேலையில் இருந்து தூக்கியெறியப்படுவேன். 20ஆவது முறை சிறையில் இருந்து வெளிவந்தேன். SCOPE திட்டம் என்னை அரவணைத்துக் கொண்டது. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

SCOPE எனக்கு தொழில்பயிற்சி தந்தது மட்டுமல்லாது வளமான எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் HRD Corp நிறுவனத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன். என்னைப் போன்ற பலர் இன்னமும் வெளியில் இருக்கின்றனர். அவர்களும் SCOPE பயிற்சியில் சேர்ந்து வளம் பெறலாம்.

புதிய உறவைத் தேடித் தந்தது

சுமாயா பிந்தி தியாகராஜா – வயது 29.
கிள்ளானில் வசிக்கிறேன். சிறையில் 8 மாதங்கள் இருந்தேன். 2018இல் என் வங்கி அட்டையை நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்தேன். ஆனால், அவர்கள் அதனைத் தவறாகப் பயன்படுத்தி இருந்தது 2020இல் தான் தெரியவந்தது. கைதுசெய்யப்பட்டு முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்டேன்.

சிறையில் இருக்கும்போது பல நாட்டவர்களையும் பலதரப்பட்டவர்களையும் சந்தித்தேன். நல்ல குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சிறையில் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை.

அடிக்கடி தற்கொலை எண்ணம் உதித்துக்கொண்டே இருந்தது. அன்றாடம் கண்ணீர் விட்டு அழுதேன். சாப்பிட முடியாமல் பரிதவித்தேன். சிறை செல்வதற்கு முன்னர் நான் தாதியாக பணிபுரிந்தேன்.

சிறை சென்றதும் எல்லாம் முடிந்துவிட்டது என்று சோர்ந்துபோனேன். வெளிவந்ததும் குடும்பத்தாருடன் என்னால் ஒட்டமுடியவில்லை. ஒரு தனியார் கையுறை நிறுவனத்தில் ஒரு சாதாரணத் தொழிலாளியாகப் பணிபுரிந்தேன். சிறுநீரகத்தில் கல் இருந்ததால் அடிக்கடி வலியால் துன்பப்பட்டேன். இந்தத் தருணத்தில்தான் SCOPE எனக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது.

இங்கு எனக்கு வேலைப் பயிற்சியைத் தந்ததோடு மட்டுமல்லாது குடும்ப உணர்வையும் அன்பையும் அள்ளித் தந்தது. இந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் சிறுநீரகத்தில் கல் இருந்ததால் ஏற்பட்ட வலியால் அடிக்கடி துடிக்கும் போதெல்லாம் புத்ராஜெயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர். குடும்பத்தில் ஒருவராகப் பார்த்துக்கொண்டனர். என்னுடைய மருத்துவச் செலவுகளை மொத்தமாக டத்தோ தான் ஏற்றுக்கொண்டார்.

இந்தப் பயிற்சிக் காலத்தில் எனக்கு ஒரு புதிய உறவும் கிடைத்தது. அவரைத்தான் விரைவில் கரம்பிடிக்கவும் உள்ளேன். மொத்தத்தில் SCOPE எனக்கு வேலை வாய்ப்பை மட்டும் தரவில்லை. புதிய வாழ்க்கையையும் குடும்பத்தையும் தந்திருக்கிறது. வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களையும் கற்றுத்தந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here