அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயால் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
போல்டர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 1,600-க்கும் மேற்பட்ட ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியதாக மாகாண ஆளுநர் ஜாரெட் போலிஸ் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொலராடோவில் காட்டுத் தீயால், இதுவரை 6 பேர் காயமடைந்துள்ளனர். அதிஷ்டவசமாக இதுவரை எந்தவொரு உயிரிழப்புகளும் பதிவாகவில்லை எனவும் அவா் கூறினார்.
மணிக்கு 169 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றினால் காட்டுத் தீ பற்றி எரிந்தது. வியாழக்கிழமை அன்று நெடுஞ்சாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் தீப்பிழம்புகள் ஏற்பட்டதாகவும் மாகாண பேரிடர் முகாமைத்துவ மைய அதிகாரிகள் கூறினர்.
பனிப்பொழிவு காலத்தில் இவ்வாறான காட்டுத் தீ பரவல் அரிதானது எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மின் கசிவு தீப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவா்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காற்றின் வேகம் ஓரளவு குறைந்து, பனிப்பொழிவு ஏற்பட்டு வரும் நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் வரலாம் எனவும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரண்டு மணி நேரத்தில் மட்டும் சுமார் 6,000 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது. இதனால் குறைந்தது 500 வீடுகள் அழிந்தன. அத்துடன், 1,000 ஏக்கர் வரை எரிந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக உதவும் நோக்குடன் மாகாணத்தில் பேரிடர் நிலை பிரகடனம் செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக கொலராடோ ஆளுநர் ஜாரெட் போலிஸ் கூறினார்.
சுமார் 13,000 மக்கள் தொகை கொண்ட கொலராடோவின் சுப்பீரியர் நகரில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களைகளையும் அங்கிருந்து வெளியேறுமாறு வியாழக்கிழமை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சுப்பீரியர் நகருக்கு மேற்கே 370 வீடுகளைக் கொண்ட ஒரு பகுதி தீயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அங்கு பெரும்பாலான வீடுகள் தீயில் எரிந்து விட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.