முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் டிசம்பர் 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீஸார் தீவிரமாக களமிறங்கினர்.

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர், கூடுதலாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, பெங்களூர் என அவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பகுதிகளில் 8 தனிப்படையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சுமார் 600 பேரின் செல்போன் எண்களை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.

இதனிடையே, முன் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here