ஜார்ஜ் டவுன், ஜனவரி 11 :
பினாங்கில் நேற்றைய நிலவரப்படி, கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் 10 தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்துமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய்த்தொற்றுகள் என்று மாநில சுகாதாரத் துறையால் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக முதல்வர் சவ் கோன் யோவ் கூறியுள்ளார்.
அவற்றில் எட்டு பேர் உம்ரா செய்துவிட்டு சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியவர்கள் ஏனைய இருவர் துபாயிலிருந்து திரும்பியவர்களாவார்.
ஓமிக்ரான் மாறுபாடு தொற்றுக்களில் பெரும்பாலானவை 1 மற்றும் 2 வகைகளில் இருப்பதாகவும், இருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“மாநிலத்தில் உள்ள அனைத்து ஓமிக்ரான் மாறுபாடு தொற்றுக்களும் இறக்குமதி செய்யப்பட்டவை, எதுவும் சமூகத்திலிருந்து பரவவில்லை.
“தற்போதைக்கு, மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தினசரி தொற்றுக்களை, குறிப்பாக புதிய மாறுபாட்டின் அடிப்படையில், கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாநில சுகாதாரத் துறையை நாங்கள் கேட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை வரை பினாங்கில் சுமார் 36 விழுக்காட்டினர் அல்லது 503,000 பேர் தங்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர் என்று சோ கூறினார்.
மாநில சுகாதாரத் துறையின் கணிப்பின் அடிப்படையில், அடுத்த மாதம் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கான இலக்கை மாநிலம் அடைய முடியும் என்று அவர் கூறினார்.









