ஜார்ஜ் டவுன், ஜனவரி 11 :
இங்குள்ள ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதுடன் 9.83 கிலோ கஞ்சாவையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் இதுபற்றிக் கூறுகையில் , கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு காவலாளி மற்றும் 51 வயதுடைய உணவக நடத்துனரும் அடங்குவர் என்றும் அவர்களை வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் கஞ்சா விநியோகிக்கச் சென்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.
“ போலீசார் மேற்கொண்ட ஒரு மாத கால கண்காணிப்பைத் தொடர்ந்தே, அவ்விருவரையும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த காரில் இருந்து 24,570 வெள்ளி மதிப்புள்ள 9,828 கிராம் எடையுள்ள 10 பொட்டலங்களிலிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.
“கடந்த ஆண்டு முதல் உள்ளூர் சந்தையில் போதைப் பொருட்கள் விற்பனையில் இந்த குழு ஈடுபட்டு வருகிறது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா 18,656 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து RM30,000 பெறுமதியான கார் மற்றும் RM35,140 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முகமட் ஷுஹைலி கூறுகையில், சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் சோதனையில் சாதகமான பதிலை பெற்றுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 9 ஆம் தேதி வரை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு போலீசார் உட்பட 380 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.